
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் முத்துமாணிக்கம் என்பவரின் பட்டாசு ஆலையில், ஏற்பட்ட தீவிபத்தில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிவிபத்தின்போது, 30க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்ததால் மீண்டும் வெடி வெடித்தது. இதனால், தீயணைப்புத்துறையினருக்கும் காயம் ஏற்பட்டது. மேலும் சிலர் மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, தப்பி ஓடிய ஆலையின் உரிமையாளரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு பட்டாசுத் தொழிற்சாலையில் நிகழ்ந்த துயரமான விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வேதனையளிக்கின்றன என்று தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தளப் பதிவில், விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்து மிகுந்த வேதனையளிக்கிறது என்றார்.
தங்கள் அன்புக்குரிய சொந்தங்களை இழந்து துயரில் இருப்பவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.




