திமுகவுடன் பாமக கூட்டணி : 29-ல் அறிவிப்பு.!

Advertisements
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்பார்கள். தமிழ்நாடு அரசியலில் அப்படித்தான் இப்பொழுது ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழப் போவதாக தெரிகிறது. தமிழக அரசியல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒருவருக்கு ஒருவர் எதிரும் புதிருமாக மோதி வரும் நிலையில் காலங்கள் பல கடந்து விட்டன.
இரு அமைப்புகளும் சாதி ரீதியாக தமிழ்நாடு முழுவதும் வெவ்வேறு பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள் . இந்த நிலையில்,  வட மாவட்டங்களில் வன்னியர் இனத்தவர் இடையே பாட்டாளி மக்கள் கட்சி நீண்ட காலமாக கொடி கட்டி பறந்து வருகிறது . இப்படிப்பட்ட சூழ்நிலையில்,  தற்போது பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாக பிளவுப்பட்டு ஒரு பக்கம் அன்புமணியும் இன்னொரு பக்கம் மருத்துவர் ராமதாஸும் தலைமை ஏற்று நடத்தி வருகிறார்கள் .
இருவருக்கும் இடையே சமாதான எல்லையை தாண்டி தற்பொழுது உச்சகட்ட மோதல்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் மருத்துவர் அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி என்பது உறுதியாகிவிட்டது. பாரதிய ஜனதா கட்சிக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடையே தொகுதி பங்கீடு மட்டும் முடிவு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது .
இந்த நிலையில் மருத்துவர் ராமதாஸ் ஏற்கனவே,  திமுக உடன் கூட்டணி வைக்கலாம் என்ற முடிவில் இருந்தார். தற்பொழுது அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இணைவதால் மருத்துவர் ராமதாஸுக்கு வேறு வழி எதுவும் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது .
இதற்கிடையே ஏற்கனவே ஒரு முறை முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி பேசிய நிலையில்,  கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக திமுக மேலிடத்தில் தொடர்பு கொண்டு மருத்துவர் ராமதாஸ் பேசியிருக்கிறார் . அப்பொழுது திமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு தனது விருப்பத்தை அவர் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது .
ஆனால் திமுக மேலிடம் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது.  காரணம் திமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு பலமான கூட்டணியாக இருக்கிறது . விடுதலைச் சிறுத்தை அமைப்புக்கு தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய தலித் வாக்கு வங்கி இருக்கிறது எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியை கைவிட முடியாது என்ற சூழ்நிலை திமுகவுக்கு இருக்கிறது .
இந்த நிலையில்,  பாரதிய ஜனதா கட்சி மேலிட பொறுப்பாளர் மத்திய மந்திரி பியூஸ் கோயல்,  சென்னை வந்த நிலையில் அன்பு மணி தரப்பிலான கூட்டணி குறித்து பேசி முடிவு எடுத்ததாக சொல்லப்படுகிறது . இதன் மூலம் வட மாவட்டங்களிலும் வன்னியர்கள் சமுதாயம் வாழும் பகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்கு முழுமையான வாக்குகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது .
தற்பொழுது இதை கணக்கில் கொண்டு திமுக தரப்பில் ஏன் மருத்துவர் ராமதாசை இணைத்துக்கொள்ளக் கூடாது என்ற ஆலோசனை நடைபெற்று வருகிறது . ஏற்கனவே மருத்துவர் ராமதாஸ் பலமுறை திமுக மேல் இடத்தை தொடர்பு கொண்டும் எந்தவித முடிவு எட்டப்படாத நிலையில் தற்போது மருத்துவர் ராமதாசை இணைத்துக்கொள்ளலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன .
இது தொடர்பாக திமுக அமைச்சர் ஏ.வ வேலு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் அவர் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜிகே மணியை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதேசமயம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எந்தவித காரணம் கொண்டும் இழந்து விடக்கூடாது என்பதிலும் திமுக மிக கவனமாக இருக்கிறது .
எனவே இது தொடர்பாக திருமாவளவனிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.  திருமாவளவன் சமாதானம் ஆகிவிட்டால் மருத்துவர் ராமதாசை திமுகவுடன் இணைத்துக்கொள்ளலாம் என முதல்வர் தரப்பில் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன .
மருத்துவர் ராமதாசை திமுகவில் இணைத்துக் கொள்வதன் மூலம் வன்னியர்கள் ஓட்டை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை தக்க வைத்துக் கொள்ளலாம் என திமுக மேலிடம் கருதுகிறது . குறிப்பாக வட மாவட்டங்களில் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஐந்து தொகுதிகளை ஒதுக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டதாக சொல்கிறார்கள் .
இதே சமயத்தில் அன்புமணிக்கு மாம்பழச் சின்னம் கிடைத்துவிடக்கூடாது என்பதில் மருத்துவர் ராமதாஸ் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் . அந்த வகையில் தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது . எனவே வருகிற தேர்தல் சமயத்தில் மாம்பழ சின்னம் அன்புமணிக்கும் கிடைக்காது ராமதாசுக்கும் கிடைக்காது என்கிற சூழ்நிலை ஏற்படலாம் என தெரிகிறது .
அந்த வகையில் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கலாமா என்றும் ஆலோசனை நடைபெற்று வருகின்றன . அல்லது பாட்டாளி மக்கள் கட்சிக்கு தனிப்பட்ட சின்னம் கிடைக்குமானால் ஆட்சேபபனை தெரிவிக்கவும் திமுக தயாராக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சம்மதம் தெரிவித்து விட்டால் திமுகவுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியாக சேரும் என உறுதியாக தெரிகிறது . அதேசமயம் அன்புமணி ஒரு பக்கமும் ராமதாஸ் ஒரு பக்கமும் தேர்தல் களத்தில் குதிக்கும் பொழுது வடமாவட்டங்களில் அடிதடி மோதல்கள் ஏற்படலாம் என்பதும் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது .
தற்போதைய சூழலில் அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி,  அதிமுக , பாஜக கூட்டணியுடன் இணைந்து விட்டதால் ராமதாஸ் தரப்பில் வேறு கூட்டணிக்கான முகாந்திரம் எதுவும் கண்ணுக்கு எட்டிய தொலைவில் இல்லை எனவே அவர் திமுகவில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகபட்சமாக இருக்கிறது என்பது முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது .
இதற்கிடையே வருகிற 29ஆம் தேதி சேலத்தில் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு . மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.  இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து மருத்துவர் ராமதாஸ் தகவல் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *