இந்தியாவிலேயே விளம்பர மோகம் கொண்ட அரசு திமுக அரசுதான் – வானதி சீனிவாசன்!

Advertisements

கோவை:

இந்தியாவிலேயே விளம்பர மோகம் கொண்ட அரசு திமுக அரசுதான். இந்துக் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழில்கூட முதலமைச்சர் ஸ்டாலின் படத்தை அச்சிடுபவர்கள் மத்திய அரசைக் குறை சொல்வது வேடிக்கை என்று பாஜக மகளிர் அணி மாநில தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, பாஜக மகளிர் அணி மாநில தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவை உலகின் மூன்றாவது பொருளாதார நாடாகவும், சுதந்திர நூற்றாண்டான 2047 இல் முதல் பொருளாதார நாடாகவும் மாற்றுவதுதான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் இலக்கு.

அந்த லட்சிய இலக்கை அடையும் நோக்கில், தொலைநோக்குப் பார்வையுடன் 2025-26ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.

அனைத்துத் தரப்பினரும் பட்ஜெட்டை பாராட்டும் நிலையில், அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக மாநிலங்களுக்கு இடையே பிரிவினையைத் தூண்டும் வகையில், கடும் வார்த்தைகளால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.

மத்திய பட்ஜெட்டை விமர்சித்து முதலமைச்சர் நேற்று (1.2.2025) வெளியிட்ட பதிவில், “விளம்பர மோகம் கொண்ட மத்திய அரசு, திட்ட விளம்பரங்களில் மத்திய அரசின் முத்திரை இடம் பெறாவிட்டால், திட்டம் சரியாகவும் செம்மையாகவும் செயல்படுத்தப்பட்டிருப்பினும், நமக்குச் சேரவேண்டிய திட்ட நிதியை விடுவிப்பதில்லை.

விளம்பரம் ஒன்றையே பாராட்டும் மத்திய அரசு, மக்கள் நலனில் எந்தவொரு அக்கறையையும் காட்ட மறுக்கிறது” என, பழி சுமத்தியிருக்கிறார்.

இந்தியாவிலேயே ஏன் உலகிலேயே விளம்பர மோகம் கொண்ட அரசு என்றால் அது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுதான்.

அரசு அலுவலகங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் படங்கள் கூட வைப்பதில்லை. எல்லா இடங்களிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படம்தான்.

திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி. வெளிநாடுகளில் தோன்றிய மதங்களின் பண்டிகைகளுக்குத் தவறாமல் வாழ்த்துச் சொல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் ஒரு வார்த்தையில் கூட வாழ்த்து சொல்வதில்லை.

தமிழர்களின் உணர்வோடு, வாழ்வியலோடு கலந்து விட்ட முருகப் பெருமானின் தைப்பூச திருவிழாவுக்கு வாழ்த்துச் சொல்லக்கூட மனம் வருவதில்லை. அந்த அளவுக்கு மனம் முழுக்க வெறுப்பு.

ஆனால், இந்து மத கோயில் கும்பாபிஷேகங்கள், திருவிழாக்களில் அழைப்பிதழ், விளம்பரங்களில் அந்தந்த கோயில்களின் சுவாமி படம் இருக்கிறதோ இல்லையோ, முதலமைச்சர் ஸ்டாலின், அவரது மகன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படம்தான் பெரிதாக இருக்கிறது.

பல நேரங்களில் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழா, திமுக பொதுக்கூட்ட அழைப்பிதழா எனக் குழம்ப வேண்டியிருக்கிறது. விளம்பர மோகத்திற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா?

தமிழ்நாடு அரசின் எந்தத் திட்டமாக இருந்தாலும், சாலைகள், அரசுக் கட்டடங்கள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள் என அனைத்திற்கும் கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்டப்படுகிறது.

தமிழகத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், ராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா எத்தனையோ முதலமைச்சர்கள் இருக்க, கலைஞர் கருணாநிதி மட்டுமே முதலமைச்சராக இருந்தது போன்ற தோற்றத்தை உருவாக்க நினைப்பது விளம்பர மோகம் இல்லையா?

மத்திய அரசு நிதி, மாநில அரசு நிதியென எந்த அரசு நிதியாக இருந்தாலும் அது மக்களின் வரிப்பணம். எந்த அரசு நிதி கொடுக்கிறதோ அந்த அரசின் முத்திரை இருப்பதில் என்ன தவறு? ரேஷனில் இலவச அரிசி கொடுப்பதில் பெரும் பங்கு மத்திய அரசின் பங்கு என்று தெரிவித்துள்ளார்.

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *