
தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது . ஆனால் அதற்கு தீர்வு காணும்படி தமிழக அரசு எதுவும் செய்யவில்லை. ஆகையால் இந்த பிரச்சனைக்கு முடிவாக கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5-ந் தேதி இலங்கை பயணம் மேற்கொள்ளும் நிலையில் கச்சத்தீவு மீட்பு தீர்மானத்தை தமிழ்நாடு சட்டசபை நிறைவேற்றுகிறது.தமிழ்நாட்டுக்கு சொந்தமானது கச்சத்தீவு. 1974-ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார், தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்தார். 1974-ம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி, கச்சத்தீவு தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியாக இருந்தது.
ஆனால் 1976-ம் ஆண்டு இலங்கையுடனான மற்றொரு ஒப்பந்தம் மூலம், தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை உள்ளிட்டவை பறிக்கப்பட்டது.தமிழ்நாட்டு மீனவர்கள் இன்று வரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடைபெறுகிறது. தமிழக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டும் மத்திய அரசு, இலங்கை அரசுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாடு அரசும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதங்கள் மூலமாகவும் நேரில் வலியுறுத்தியும் இலங்கை கடற்படையின் தாக்குதல் நிறுத்தப்படவில்லை. இதனால் தமிழ்நாட்டு மீனவர்கள் கடல் தொழிலைக் கைவிட்டாக வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர் .
இதனால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டின் ஒரே கோரிக்கையாக இருந்து வருகிறது. 1974-ம் ஆண்டு முதலே தமிழ்நாட்டில் சட்டசபை தீர்மானம்,, தேர்தல் வாக்குறுதிகள் என கச்சத்தீவு விவகாரம் முதன்மை பிரச்சனையாக இருந்து வருகிறது.இந்த பின்னணியில் இன்று தமிழ்நாடு சட்டசபையில் கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. தமிழ்நாடு சட்டசபையில் 1974, 1991 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தற்போது 4-வது முறையாக தமிழ்நாடு சட்டசபையில் கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த சிறப்புத் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.பிரதமர் நரேந்திர மோடி வரும் 5-ந் தேதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடி, இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் கச்சத்தீவை திரும்பப் பெறக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.



