
வடவள்ளி:
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூண்டி அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது.
இந்தக் கோவிலுக்குத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வார்கள்.
மலைகோவில் அடிவாரத்திலிருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள 7-வது மலையில் சுயம்பு லிங்க சுவாமி உள்ளது.
7-வது மலையில் உள்ள சுயம்பு லிங்கத்தை வழிபடத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் வருவது வழக்கம்.
இந்த மலைப்பாதையில் பக்தர்கள் ஏறுவதற்கு ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி முதல் மே மாதம்வரை அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நடப்பாண்டில் இன்று முதல் மே மாதம் 31-ந் தேதிவரை வெள்ளியங்கிரி மலையேறப் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வெள்ளியங்கிரி மலையேறுவதற்காக இன்று காலையிலேயே ஏராளமான பக்தர்கள் பூண்டி அடிவாரத்தில் குவிந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
அவர்களுக்கு அடிவாரத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ பரிசோதனை முகாமில் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.
அவர்கள் வைத்திருந்த உடமைகளையும் வனத்துறையினர் சோதித்தனர்.
அவர்கள் பிளாஸ்டிக் பைகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் வைத்துள்ளனரா எனக் கண்காணித்தனர்.
அப்படி பொருட்கள் இருந்தால் அதனை அவர்களிடம் வாங்கி விட்டு மலையேறுவதற்கு அனுமதித்தனர்.
பின்னர் பக்தர்கள் அடிவாரத்திலிருந்து மலையேற்ற பயணத்தைத் தொடங்கினர்.
அப்போது கைகளில் மூங்கில் குச்சிகள் மற்றும், தங்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட பொருட்கள் வைத்திருந்தனர்.
இன்று முதல் மே மாதம் 31-ந் தேதிவரை மலையேற அனுமதி உள்ளதால் வருகிற நாட்களில் இன்னும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே மலையேற்றத்துக்காக வரும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் குழந்தைகள், உயர் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு, சிறுநீரகக் கோளாறு, சர்க்கரை நோய், ரத்த சோகை உள்ளவர்கள் மலையேற்றப் பயணத்தின்போது கவனத்துடன் இருக்க வேண்டும்.
பக்தர்கள் தனியாகச் செல்லாமல் குழுவாகச் செல்ல வேண்டும். அத்தியாவசியமான பொருட்களான குடிநீர், உணவு, மருந்துப் பொருட்களை எடுத்து வர வேண்டும்.
மலையேற்ற பகுதிகளில் கடும் குளிர் நிலவுவதால் தேவையான பாதுகாப்பு உடைகளை எடுத்து வர வேண்டும். அடிவாரத்தில் உள்ள மருத்துவ முகாமில் பரிசோதனை செய்தபின்னர் மலையேற வேண்டும்.
மேலும் மலையேற்றத்தின்போது தலைவலி, நெஞ்சு வலி, தலைசுற்றுதல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டால் பயணத்தைத் தொடராமல் உடனடியாக மருத்துவக் குழுவினரை அணுக வேண்டும் எனப் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
