
கடந்த 2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் 40 இந்திய பாரா மிலிட்டரி வீரர்கள் உயிரிழந்தனர். இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த சம்பவம். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. அடுத்ததாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் பஹால்காம் தாக்குதலுக்கு பிறகு, இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து பல இடங்களில் தாக்குதல்களை நடத்தியது. அதற்கு பிறகு, ஜம்மு காஷ்மீரும் இந்தியாவும் சற்று அமைதியாக இருந்தது. தீவிரவாத சம்பவங்களும் வெகுவாக குறைந்திருந்தன.
இந்த நிலையில்தான், டெல்லியில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலுக்கு 9 பேர் பலியானது நாட்டில் கடும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பதாக சொல்லப்படும் டாக்டர். உமர் முகமதுவும் புல்வாமா பகுதியைச் சேர்ந்தவர்தான். தற்போது, 32 வயதான இவர், நேற்று டெல்லி செங்கோட்டை அருகே மதியம் 3.19 மணியளவில் ஹூண்டாய் ஐ20 காரில் வந்துள்ளார். மாலை 6.48 மணி வரை கிட்டத்தட்ட 3 மணி நேரம் கழித்துதான் அங்கிருந்து சென்றுள்ளார். ஆனால், காரை விட்டு அவர் இறங்கவே இல்லை. உமர் புறப்பட்ட 4 நிமிடங்களுக்கு பிறகு, அதாவது 6.52 மணிக்கு செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் வாயில் அருகே, சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்துள்ளது.

இந்த சம்பவத்தில் நிச்சயமாக டாக்டர். உமருக்கு தொடர்பு இருப்ப தாக சொல்லப்படுகிறது. இவர், ஹரியானா மாநிலம் பரிதாபாத்திலுள்ள அல் ஃபாலா மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இவரை, போன்றவர்களை ஒயிட் காலர் தீவிரவாதிகள் என்று போலீசார் வகைப்படுத்தியுள்ளனர். டாக்டர். உமரை போலவே ஏராளமான ஒயிட் காலர் பணியில் இருப்பவர்கள் வட இந்தியா முழுவதுமே தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது . உமர் பயன்படுத்திய ஐ.20 காரும் பலரிடத்தில் கைமாறியது தெரிய வந்துள்ளது. ஆர்.டி.எக்ஸ் வெடிபொருளை அமோனியம் நைட்ரேட் fuel oil – லுடன் சேர்ந்து வெடிபொருளை உமர் தயாரித்துள்ளார்.அமோனியம் நைட்ரேட் என்பது உரங்கள் தயாரிக்க பயன்படும் ஒரு ரசாயனம் . இது சாதாரண நிலையில் வெடிக்காது.
எனினும், பெட்ரோலில் இருந்து தயாரிக்கப்படும் fuel oil- என்பதை பயன்படுத்தி இதனை வெடி பொருளாக மாற்ற முடியும். இதைத்தான், அமோனியம் நைட்ரேட் எரிபொருள்-எண்ணெய் ( ANFO) என்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரி ஒருவர், ‘சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போது, உமரிடத்தில் எந்தவிதமான குழப்பத்தையோ, பதற்றத்தையோ காண முடியவில்லை. யாருடனும் பெரிதும் பேசி , பழகாதவர் போல காணப்படுகிறார் ‘என்று தெரிவித்துள்ளார்.
பரிதாபாத்தில் டாக்டர். அதீர் அகமது, டாக்டர்.முஜ்ஜமீல் அகமது ஆகியோரிடத்தில் இருந்து 2,900 கிலோ அமோனியம் நைட்ரேட் கைப்பற்றப்பட்ட சில மணி நேரத்தில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இவர்கள் இருவரும் டாக்டர். உமர் முகமது பணியாற்றிய அதே அல் ஃபாலா மருத்துவமனையில்தான் டாக்டர்களாக பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது , கூட்டாளிகள் , இருவரும் பிடிபட்டதையடுத்து, பரிதாபாத்தில் இருந்து தப்பிய உமர், டெல்லிக்கு வந்து இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. முதலில், அதிக ஜன நெருக்கடி நிறைந்த சந்தை பகுதியான சாந்தினி சவுக்கில் காரை வெடிக்க வைத்து ஏராளமான மக்களை கொல்ல வேண்டுமென்பதுதான் உமரின் நோக்கமாக இருந்துள்ளது. ஆனால், பாதுகாப்பு காரணமாக அவரால் அங்கு போக முடியவில்லை. தொடர்ந்து, செங்கோட்டை அருகே வெடிகுண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக தெரிகிறது.

தீவிரவாதிகள் என்றால் காடு, மலைக்குள் கையில் துப்பாக்கியுடன்தான் இருக்க வேண்டுமென்பது இல்லை. தற்போது, தீவிரவாதம் ஒயிட் காலர் ஜாப்பில் இருப்பவர்கள் கைக்கு மாறியுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேருமே டாக்டர்கள். மூவருமே ஜெய்ஷ் இ முகமது அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பரிதாபாத்தில் மற்ற இருவர் பிடிபட்டு விட, டெல்லியில் குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக கருதப்படும் டாக்டர். உமர் முகமது மட்டும் இன்னும் பிடிபடவில்லை. இவர்கள் தவிர, லக்னோவை சேர்ந்த பெண் டாக்டர். ஷாகீன் ஷாகீத் என்பவரும் பிடிபட்டுள்ளார். மக்களின் உயிரை பாதுகாக்கும் உயரிய பணியில் அர்ப்பணித்துக் கொண்டவர்கள். ஆனால், இவர்களே தற்போது கொத்து கொத்தாக மக்களை கொல்ல துணிந்திருப்பதுதான் கடும் வேதனையை மக்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஜெய்ஷ் இ முகமது அமைப்பு இந்தியாவில் இயங்கி வரும் மைனாரிட்டி கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களை மூளை சலவை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, பஹால்காம் தாக்குதைலையடுத்து, இந்தியா பாகிஸ்தான் மீது கடும் விமானத்தாக்குதலை நடத்தியது இதற்கு பதிலடி கொடுப்பதற்காக, லஸ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீத் வேறு மாதிரியாக திட்டமிட்டுள்ளாராம்.இனி, பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் இயங்க போவதில்லையாம். மாறாக, கிழக்கு பாகிஸ்தான் அதாவது, வங்கதேசத்தில் இருந்து லஸ்கர் இ தொய்பா அமைப்பினர் இயங்க போகின்றனராம். இதற்காக, தனது நெருங்கிய சகாக்களை அனுப்பி வங்கதேசத்தில் தீவிரவாத பயிற்சி அளித்து வருகிறார்களாம். சிறார்களை கூட, இந்த பயிற்சியில் ஈடுபட வைப்பதாகவும் தெரிகிறது. இதனால், இந்திய ராணுவம், உளவுத்துறை உஷார் நிலையில் உள்ளது.


