
கல்வியே சமூக மாற்றத்திற்கான மிகச்சிறந்த ஆயுதம், கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை உன் பிள்ளையின் கல்விக்கு செலுத்து அது உனக்கு பயன் தரும், எனக் கூறிய மகத்தான மானுட சிந்தனைக் கொண்ட புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள் இன்று.
டாக்டர் அம்பேத்கர் ஒரு சமூக சீர்திருத்தவாதி, அரசியல்வாதி மற்றும் பொருளாதார நிபுணர், இந்திய சுதந்திர இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். அவர் இந்திய அரசியலமைப்பின் வரைவுக் குழுவின் தலைவராகவும் இருந்தார் மற்றும் இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதில் மிக முக்கிய பங்கு வகித்தார். அவரது பங்களிப்பு இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
இளமை;
அம்பேத்கர் இன்றைய மத்திய பிரதேசத்தில் உள்ள ” மாவ் ” எனும் இடத்தில் ராம்ஜி மாலோஜி சக்பாலுக்கும் மற்றும் பீமாபாய் என்கிற தம்பதிக்கு ஏப்ரல் 14-ஆம் தேதி 1891ஆம் ஆண்டு மகனாக பிறந்தார். இவர் இவரது பெற்றோர்களுக்கு 14-வது குழந்தையாக பிறந்தார். இவருக்கு இவரது பெற்றோர்கள் இட்ட பெயர் `பீமாராவ் ராம்ஜி ’ ஆகும். இவர் ஒரு மகர் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர்.
கல்வி;
தாழ்த்தப்பட்ட பிரிவினை சேர்ந்தவர் என்பதனால் சிறுவயது முதலே பள்ளிகளில் இவர் சந்தித்த இன்னல்கள் அதிகம் என்றே கூறவேண்டும். பள்ளிக் கல்வியை முடித்த பின்னர் மும்பையில் அவர் தனது உயர் கல்வியைத் தொடர்ந்தார்.
பீமாராவ் ராம்ஜிக்கு அம்பேத்கர் என பெயர் வரக் காரணம்:
இவர் பள்ளிகளில் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வரும்போது மகாதேவ அம்பேத்கர் என்ற ஆசிரியர் அவரின் மீது மிகுந்த அன்பு காட்டினார். அந்த அன்பின் அடையாளமாக தனது பீமாராவ் ராம்ஜி என்ற பெயருக்கு பின்னால் தனது குருவின் பெயரை சேர்த்து கொண்டார். அன்று முதல் அவர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் ஆனார். அதன் பின் அவரது முழுப்பெயரை கூறாமல் அவரை அனைவரும் அம்பேத்கர் என்று அழைக்க ஆரம்பித்தனர்.
கல்வியில் சிறந்து விளங்கிய அம்பேத்கர் அப்போதைய பரோடா மன்னரின் கல்வி உதவி மூலம் அரசியல் மற்றும் பொருளாதாரம் பிரிவில் இளங்கலை படிப்பு படித்தார். இளங்கலை படிப்பினை முடித்த அம்பேத்கர் பரோடா மன்னரின் அழைப்புக்கு இணங்கி அவரது அரண்மனையில் படைத் தலைவராக பதியேற்றார். பரோடா மன்னரின் உதவியுடன் அவர் முதுகலை படிப்பிற்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க அமெரிக்கா பயணம் ஆனார். உயர்கல்வி படிப்பிற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் அம்பேத்கர் ஆவார். அங்கும் தனது சிறப்பான படிப்பை தொடர்ந்த அவர் அரசியல், பொருளாதாரம், தத்துவம் மற்றும் சட்டம் போன்றவற்றில் முதுகலை பட்டங்களை பெற்றார்.
தீண்டாமை மற்றும் சாதிப்பிரிவினை;
அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் அவர்களது நிலைமை மாறவேண்டும் என்று நிறைய போராட்டங்களை செய்தார். தீண்டாமை மற்றும் சாதிப்பிரச்சனை இதை இரண்டையும் முற்றிலுமாக ஒழிக்க தாழ்த்தப்பட்ட மக்களிடையே தனது பேச்சுகள் மூலம் விழிப்புணவினை ஏற்படுத்தினார்.
இரண்டாவது வட்டமேசை மாநாடு:
இரண்டாம் உலக வட்ட மேசை மாநாட்டில் இந்தியாவின் சார்பாக கலந்து கொள்ள லண்டன் சென்ற அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக “இரட்டை வாக்குரிமை” என்ற சட்டத்தினை கேட்டு பெற்றார். பிறகு சில ஆண்டுகளில் காந்தியடிகளின் போராட்டத்தினால் இரட்டை வாக்குரிமை கைவிடப்பட்டு தாழப்பட்டோருக்கான தனித்தொகுதி என்ற ஒப்பந்தத்தையும் கொண்டுவந்தார்.
சட்ட அமைச்சர்:
சுதந்திரம் அடைந்த இந்தியாவின் அரசியல் சாசனத்தை வடிவமைத்த இவர் சட்ட அமைச்சராகவும் பதவியேற்றார். இதன் மூலம் அரசியல் சட்டபிரிவின் பிரிவுகளை தொகுத்து அதில் அனைத்து இந்திய மக்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு மற்றும் அரசியல் வரையறை என அனைத்தையும் ஆராய்ந்து தொகுத்தார். இது மிக சிறந்த ஆவணமாக இன்றளவும் கருதப்படுகிறது.
அம்பேத்கரின் இறப்பு:
தாழ்த்தப்பட்ட மக்களின் நல்வாழ்விற்காக தனது வாழ்நாள் முழுதும் போராடிய அவர்1955 ஆம் ஆண்டு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார். பின்னர் நோயின் தாக்கம் தீவிரம் அடைய அவருடைய பார்வை முதலில் பறிபோனது. பின்னர் சில மாதங்கள் படுக்கையிலே இருந்தார். கடைசியாக 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள் காலமானார்.



