
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கூடுவெளிச்சாவடி கிராமத்தில் உள்ள பெரிய குளத்தில் ராட்சத முதலை இரவு நேரத்தில் சாலை நடுவே ஒய்யாரமாக நடைபோட்டு இரை தேடி சிதம்பரம்-காட்டுமன்னார் கோவில் செல்லும் சாலையில் சென்றது.
இதனை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்துச் சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.
முதலையின் நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் பீதியுடன் சென்றனர். உடனடியாக வனத்துறை அதிகாரிகள் அந்த முதலையைப் பிடித்துப் பாதுகாப்பான இடத்தில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சுற்று வட்டார பகுதிகளான பழைய கொள்ளிடம், வல்லம் படுகை, வேளக்குடி, அகர நல்லூர், பெராம்பட்டு, திட்டு காட்டூர், அத்திப்பட்டு, அக்கரை ஜெயங்கொண்ட பட்டினம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள நீர் நிலைகளில் பெரிய அளவிலிருந்து சிறிய அளவிலான முதலைகள் காணப்படுகிறது.
தற்போது இந்தப் பகுதிகளில் பிடிக்கப்படும் முதலைகளை வனத்துறையினர் வக்காரமாரி நீர் தேக்கத்தில் விடுகின்றனர் அவ்வாறு விடப்படும் முதலைகள் மீண்டும் கிராமத்திற்குள் நுழைவதும் தொடர் கதையாக உள்ளது.
இவ்வாறு பிடிபடும் முதலைகளைச் சென்னையில் உள்ள முதலை பண்ணையில் விட வேண்டும் அல்லது இதற்கென நிரந்தர தீர்வு காணும் வகையில், அப்பகுதியில் முதலைப் பண்ணை அமைத்துக் கொடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
