8-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் ஆசிரியர்கள் மீது புகார்!

Advertisements

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து பள்ளியில் பணிபுரிந்த 3 ஆசிரியர்கள்மீது போலீசில் தாய் புகார் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே சுமார் 13 வயது மதிக்கத் தக்க சிறுமி அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு மாதம் காலமாக அந்த மாணவி பள்ளிக்கு வரவில்லை.

உடனே இதுகுறித்து அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் எதற்காக அந்த மாணவி பள்ளி வரவில்லை என்று சக மாணவிகளிடம் விசாரித்தார்.

அவர்களிடம் சரியான பதில் கிடைக்காததால், தலைமையாசிரியர் உடனே அந்த மாணவியைத் தேடி வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது தலைமை ஆசிரியர் அந்த மாணவியின் தாயாரிடம் எதற்காகச் சிறுமி பள்ளிக்கு ஒரு மாதமாக அனுப்பாமல் இருந்து வந்தீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்தத் தாயார் எனது மகள் கர்ப்பமாக இருந்துள்ளார்.

அதனால் அவருக்குக் கரு கலைப்பு செய்வதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்று வந்துள்ளோம் என்றார். இந்தத் தகவலைக் கேட்டுத் தலைமை ஆசிரியர் அதிர்ச்சியடைந்தார்.

மேலும், சிறுமியின் தாயார் கூறிய தகவலைக் கேட்டு அவர் திடுக்கிட்டார்.

இந்த மாணவியின் கர்ப்பத்திற்கு அவர் பயின்ற பள்ளியில் பணிபுரியும் 2 பட்டதாரி ஆசிரியர்களும், ஒரு இடைநிலை ஆசிரியரும் தான். 3 பேரும் சேர்ந்து தான் அந்த மாணவியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

உடனே இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவிக்க தாயாரை தலைமையாசிரியர் அறிவுறுத்தினார்.

அதன்பேரில் சிறுமியின் தாயார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் அதிகாரிகள் அந்த மாணவியை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்காகச் சேர்த்தனர்.

இந்தச் சம்பவம்குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் மாணவி பயின்ற அரசு பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் பாரூரை சேர்ந்த சின்னசாமி (வயது57).

மத்தூரைச் சேர்ந்த ஆறுமுகம் (45), வேலம்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் (37) ஆகிய 3 பேரும் சேர்ந்து மாணவியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும், இதன்காரணமாக மாணவி கர்ப்பமானதும் தெரியவந்தது.

இதுதொடர்பாகப் பர்கூர் டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் அனைத்து மகளிர் போலீசார் அரசுப் பள்ளி ஆசிரியர்களான 3 பேரையும் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் ஏற்கனவே ஒரு தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாமில் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் போலி என்.சி.சி. பயிற்சியாளர், பள்ளி தாளாளர் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியுள்ளாகியது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி அருகே அரசு பள்ளியில் பயின்ற 8-ம் வகுப்பு மாணவியை 3 ஆசிரியர்களே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியது மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *