கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் உள்ள குழந்தைக்குள் வளரும் கரு!

Advertisements

மகாராஷ்டிராவில் கர்ப்பிணி பெண்ணின் கருவில் உள்ள குழந்தைக்குள் கரு வளரும் அரிதினும் அரிதான நிலையை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் புல்தானா மாவட்டத்தின் அரசுப் பெண்கள் மருத்துவமனையில் 35 வார [9 மாத] கர்ப்பிணியான 32 வயது பெண் ஒருவருக்கு சோனோகிராபி செய்தபோது அவரின் ‘கருவில் கரு’ [Foetus inside foetus] வளருவது கண்டறியப்பட்டது.

அதாவது பெண்ணின் வயிற்றுக்குள் உண்டாகியுள்ள குழந்தையின் உடலினுள் மற்றொரு முழு வளர்ச்சியடையாத கரு உருவாகி உள்ளது.

இதுகுறித்து அந்த மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் பிரசாத் அகர்வால் கூறுகையில், ஆரம்பத்தில் நான் ஆச்சரியமடைந்தேன், பின்னர் கவனமாக ஸ்கேனை மறுபரிசீலனை செய்தேன்.

இது முந்தைய சோனோகிராஃபியில் தவறவிடப்பட்டது. ஏனெனில் இது மிகவும் அரிதான நிலை, இது போன்ற ஒரு நிலை இருக்கும் என்று யாரும் கற்பனை கூடச் செய்ய முடியாது. எனவே, நான் இரண்டு மருத்துவர்களிடம் விரிவான ஆலோசனைக்குப் பின் அதை உறுதி செய்தேன் என்று தெரிவித்தார்.

மேலும், குழந்தை பிறந்த பின்னரே இந்த நிலை பெரும்பாலும் கண்டறியப்படும். ஆனால் இப்பெண்ணுக்கு பிரசவத்துக்கு முன்னரே கண்டறியப்பட்டுள்ளது.

இது 5 லட்சத்தில் ஒருவருக்கு மட்டும் நிகழக்கூடிய அரிய வகையான மருத்துவ நிலை. இதுவரை உலகில் வெறும் 200 பேருக்கு மட்டுமே இந்த நிலை உண்டாகியது. அதில் இந்தியாவில் 15-20 பேரில் மட்டுமே இந்த நிலை பதிவாகியது என்று தெரிவித்தார்.

இந்த நிலைக்கான சரியான காரணம் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை, ஆனால் இது ஒரே மாதிரியான இரட்டையர்களின் வளர்ச்சியின்போது நிகழும் ஒழுங்கின்மையின் விளைவு என நம்பப்படுகிறது.

இதற்கிடையே அந்தப் பெண் பாதுகாப்பான பிரசவத்திற்காகச் சத்திரப்பதி சம்பாஜி நகர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *