Cricket World Cup: இந்திய அணி அபார வெற்றி!

Advertisements

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.

லக்னோ: உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 87 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 49 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 34.5 ஒவர்களில் 129 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அந்த அணியின் நட்சத்திர வீரர்களான ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினர். அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 27 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் முகமது சமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன் மூலமாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஆடிய 6 போட்டிகளில் 6யிலும் வென்று அசத்தியுள்ளது. அதேபோல் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. இதனால் முதலிடத்தில் இருந்த தென்ஆப்பிரிக்கா அணி 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேபோல் இங்கிலாந்து அணி 5வது தோல்வியை சந்தித்து 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதன்படி இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது.

இதனிடையே இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், “இந்த போட்டி நாங்கள் நிறைய குணாதிசயங்களை வெளிப்படுத்திய போட்டியாக அமைந்திருக்கிறது. அனுபவம் வாய்ந்த வீரர்கள் அனைவரும் சரியான நேரத்தில் எழுந்து நின்று போட்டியை வென்று கொடுத்திருக்கிறார்கள்.

முதல் ஐந்து ஆட்டங்களில் இரண்டாவதாக பேட் செய்து தற்பொழுது முதலில் பேட் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. எங்களுக்கு தனிப்பட்ட வகையில் போட்டி எப்படி சென்றது என்பதை பார்க்கும் பொழுது சவாலாக இருந்தது. இந்த ஆடுகளத்தில் ஏதோ இருக்கிறது என்று எங்களுக்கு தெரியும். மேலும் எங்களுக்கு பந்து வீச்சில் அனுபவமும் இருக்கிறது. எனவே நாங்கள் ஒரு நல்ல ஸ்கோரை பெற விரும்பினோம். ஆனால் நாங்கள் பேட்டிங்கில் நல்ல விதமாக செயல்படவில்லை. பவர் பிளேவில் மூன்று விக்கெட்டை இழப்பது சரியல்ல.

நாங்கள் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பை உண்டாக்கி இருக்க வேண்டும். ஆனால் என்னுடைய விக்கெட் உட்பட எல்லோருமே பார்ட்னர்ஷிப்பை உருவாக்காமல் தவறாகவே ஆட்டம் இழந்தோம். ஒட்டுமொத்தமாக நாங்கள் ஒரு 30 ரன்கள் குறைவாக எடுத்திருந்தோம். பந்துவீச்சில் இப்படிப்பட்ட ஒரு ஸ்கோரை எல்லா நேரத்திலும் பாதுகாக்கும் போட்டியை பார்க்க முடியாது. எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள்.

நாங்கள் ஒரு சமநிலை கொண்ட அணியை பெற்றுள்ளோம். எங்களிடம் இரண்டு நல்ல ஸ்பின்னர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இப்படியான பந்துவீச்சாளர்கள் இருக்கும் பொழுது, பேட்டர்கள் அவர்களுக்கு வேலை கொடுத்து மேஜிக்கை கொண்டு வர வைப்பது முக்கியம்” என்று அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *