“இயற்கையின் அருள் எப்போதும் மக்களின் நலனுக்கே” – அமைச்சர் கீர்த்தனா !!

Advertisements

கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே காவிரி நீர் பங்கீடு தொடர்பான சிக்கல்கள் நீண்ட காலமாக நீடித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு உரிய நீரைப் பெற்றுத்தரக் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவும், காவிரி மேலாண்மை ஆணையமும் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே, கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில், தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்குத் தினமும் 3,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்திற்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், கர்நாடகாவில் நீர் தேவை அதிகமாக உள்ளதாகக் கூறி அந்த உத்தரவை அம்மாநில அரசு செயல்படுத்த மறுத்ததுடன், காவிரி மேலாண்மை ஆணையத்திலும் முறையீடு செய்தது. இருப்பினும், ஆணையமும் அந்த உத்தரவை உறுதிசெய்து தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தியது.

இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாகக் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக, 84 அடி முழுக்கொள்ளளவு கொண்ட கபினி அணை 81.95 அடியை எட்டியுள்ளதால், உபரி நீரைத் திறந்து விடுவது குறித்துப் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார், இயற்கை யாருக்கும் சொந்தமல்ல எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டிற்குத் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 25,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழல் குறித்துத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில், இயற்கையின் அருள் எப்போதும் மக்களின் நலனுக்கே துணை நிற்பதாகக் குறிப்பிட்டுள்ளார். கர்நாடகத்தில் பெய்துவரும் கனமழையால் காவிரியில் நீர்வரத்து அதிகரித்து, டெல்டா விவசாயிகளின் பாசனத் தேவைகள் பூர்த்தியாகும் சூழல் உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், எத்தனை தடைகள் மற்றும் இடையூறுகள் வந்தாலும் மக்களின் நலனையே சிந்திக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் நல்ல மனதிற்காக இயற்கையே துணை நிற்பதாகவும், மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒவ்வொரு நல்ல முயற்சிக்கும் இயற்கையின் ஆசீர்வாதம் என்றும் இருக்கும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துவதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் காவிரி டெல்டா விவசாயிகளின் குறுவை மற்றும் சம்பா சாகுபடிகள் செழித்து வளர்ந்து, விவசாயிகளின் இல்லங்களில் வளமும் மகிழ்ச்சியும் பெருக இறைவனை வேண்டுவதாகவும் அமைச்சர் கீர்த்தனா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *