Monthly Rasi Palan: 2023 நவம்பர் மாத ராசிப்பலன்

Advertisements

2023 நவம்பர் மாத ராசிப்பலன்

 

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் – பால ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

கிரக மாற்றம்

ஐப்பசி 17 03-11-2023 கன்னி சுக்கிரன் அதிகாலை 05.13
ஐப்பசி 18 04-11-2023 சனி (வ) நிவர்த்தி பகல் 01.39
ஐப்பசி 20 06-11-2023 விருச்சிக புதன் மாலை 04.25
ஐப்பசி 30 16-11-2023 விருச்சிக செவ்வாய் பகல் 10.47
கார்த்திகை 01 17-11-2023 விருச்சி சூரியன் அதிகாலை 01.19
கார்த்திகை 11 27-11-2023 தனுசு புதன் அதிகாலை 05.53
கார்த்திகை 14 30-11-2023 துலா சுக்கிரன் அதிகாலை 01.04

மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்


அன்புள்ள மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 11-ல் சனி சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் பெறுவீர்கள். நினைத்ததை நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். சூரியன், செவ்வாய் 7, 8-ல் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது, குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது.

உடல் நிலையில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் குறைவதுடன் உங்கள் தேவைகளும் பூர்த்தியாகும். உற்றார், உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன் கிட்டும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் மட்டும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் ஓரளவுக்கு சரளமாக நடைபெறும். பிறரை நம்பி பெரிய தொகையை கடனாக கொடுப்பது, ஜாமின் கையெழுத்து போடுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் போட்ட முதலீட்டை எடுக்க முடியும்.

வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலங்களை அடையலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம் – சிவ வழிபாடு, முருக வழிபாடு செய்வதும், பிரதோஷ காலங்களில் நந்திக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்வதும் சிறப்பான பலன்களை அளிக்கும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 13-11-2023 இரவு 09.17 மணி முதல் 16-11-2023 அதிகாலை 03.00 மணி வரை.

 

ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்


அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதும், 11-ல் ராகு இருப்பதும் சிறப்பான அமைப்பாகும். மாத முற்பாதியில் சூரியன், செவ்வாய் 6-ல் இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் யோகம் இம்மாதத்தில் உண்டு.

நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றல் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து எடுக்கும் காரியங்களில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார், உறவினர்களும் அனுகூலமாக இருப்பார்கள். எதிர்பாராத உதவிகளும் கிட்டும்.

அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் சிறு தடைக்குப் பின் நிறைவேறும். கடன்கள் குறையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மங்கள ஓசை கேட்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். இதுவரை இருந்த பிரச்சினைகள் யாவும் குறையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள்.

பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபத்தை பெற முடியும். கொடுத்த கடன்களும் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

பரிகாரம் – விநாயக பெருமானை வழிபடுவதாலும், சதுர்த்தி விரதம் கடைப்பிடிப்பதாலும் வாழ்வில் ஏற்பட்ட தடைகள் யாவும் விலகும்.
சந்திராஷ்டமம் – 16-11-2023 அதிகாலை 03.00 மணி முதல் 18-11-2023 காலை 07.00 மணி வரை.

 

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்


அன்புள்ள மிதுன ராசி நேயர்களே, நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய உன்னதமான மாதமாக இம்மாதம் இருக்கும். உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் வளமான பலன்களை அடைவீர்கள். தற்போது இருக்கும் தடங்கல்கள் எல்லாம் படிப்படியாக குறையும்.

நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள் குறையும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. பொருளாதார மேம்பாடுகளால் சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பொன் பொருள் சேரும்.

குரு வக்ர கதியில் இருப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி நல்ல லாபம் கிடைக்கும். வெளி தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும்.

கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகேற்ற உயர்வுகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் பேசும் பொழுது மட்டும் சற்று பொறுமையை கடைபிடிப்பது நல்லது.

பரிகாரம் – விஷ்ணு பகவானையும் மகாலட்சுமி தேவியையும் அர்ச்சனை செய்து வழிபட்டால் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

சந்திராஷ்டமம் – 18-11-2023 காலை 07.00 மணி முதல் 20-11-2023 காலை 10.07 மணி வரை.

 

கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்


அன்புள்ள கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 8-ல் சனி, மாத முற்பாதியில் 4-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். தேவையில்லாத அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், வரவுக்கு மீறிய வீண் செலவுகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, வண்டி வாகனங்களில் செல்கின்ற பொழுது சட்ட விதிக்கு உட்பட்டு நடப்பது நன்மையை தரும்.

குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, முன் கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். தடைபட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலனை அடையலாம்.

பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்படும்.

உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவதிலும் இழுபறி நிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் எதிர்பார்த்த லாபத்தை பெற்று விட முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்கள் குறையும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை.

பரிகாரம் – சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதாலும், சனிக் கவசங்கள் படிப்பதாலும், விநாயகர், ஆஞ்சநேயர் வழிபாடு செய்வதாலும் நன்மைகள் பல உண்டாகும்.

சந்திராஷ்டமம் – 20-11-2023 காலை 10.07 மணி முதல் 22-11-2023 பகல் 12.57 மணி வரை.

 

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்


அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைத்து இதுவரை உங்களுக்கிருந்த பொருளாதார ரீதியான நெருக்கடிகள் சற்று குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.

பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு குடும்பத்தில் ஒற்றுமை குறையும். எதிலும் நிதானத்துடன் இருப்பது, பேச்சில் பொறுமையை கடைப்பிடிப்பது, முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. உற்றார், உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் ஓரளவுக்கு நற்பலனை அடைய முடியும்.

ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்.

பெரிய முதலீடு கொண்ட செயல்களை தற்போதைக்கு தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்கள் குறையும்.

பரிகாரம் – ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபடுவதாலும், நவகிரகங்களில் ராகுவிற்கு மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வதாலும் நன்மைகள் உண்டாகும்.

சந்திராஷ்டமம் – 22-11-2023 பகல் 12.57 மணி முதல் 24-11-2023 மாலை 04.00 மணி வரை.

 

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்


அன்புள்ள கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் சனி, மாத பிற்பாதியில் 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்களுடைய செயல்களுக்கு நெருங்கியவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, தாராள தனவரவு ஏற்படும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும்.

சிலருக்கு புதிய சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிறப்பான பணவரவால் பொருளாதார நிலை மேன்மையடையவதுடன் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும் குரு 8-ல் இருப்பதால் பண விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும்.

நல்ல வரன்கள் வீடு தேடி வரும். 7-ல் ராகு இருப்பதால் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு குடும்ப ஒற்றுமை சற்று குறைந்து காணப்படும். விட்டுக் கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தேவையற்ற பயணங்களை குறைத்துக் கொள்வதன் மூலம் வீண் அலைச்சல், டென்ஷன் எல்லாம் குறைந்து மனநிம்மதி ஏற்படும்.

மேலதிகாரிகளை சற்று அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது.

பரிகாரம் – தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது, சிவ வழிபாட்டை மேற்கொள்வது மிகவும் நல்லது.

சந்திராஷ்டமம் – 24-11-2023 மாலை 04.00 மணி முதல் 26-11-2023 இரவு 07.55 மணி வரை.

 

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்


அன்புள்ள துலா ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு இருப்பது நல்லது. பொருளாதார ரீதியாக நெருக்கடிகள், பணவரவில் இடையூறுகள், குடும்பத்தில் நிம்மதி குறைவுகள் ஏற்படும் என்றாலும் 5-ல் சனி, 6-ல் ராகு சஞ்சரிப்பதால் தக்க நேரத்தில் தகுந்த உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாக கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு.

எடுக்கும் முயற்சிகளில் படிப்படியான ஏற்றங்களை அடைவீர்கள். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் ஓரளவு நீங்கும். நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் சற்று குறையும். கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

உற்றார், உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும் நேரம் என்பதால் பேச்சில் சற்று பொறுமையுடன் இருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் சற்று குறைந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் தொழிலில் ஒரு சில ஆதாயங்களை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வெளியாட்கள் சொல்லும் சொற்களை கேட்காமல் எடுத்த பணியில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருந்தால் நல்ல பெயர் எடுக்க முடியும்.

எதிர்பார்த்த பதவி உயர்வுகள், இடமாற்றங்கள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும்.

பரிகாரம் – சிவ பெருமானையும் முருக கடவுளையும் வணங்கி வழிபாடு செய்து வந்தால் வாழ்வில் உள்ள தடைகள் விலகி முன்னேற்றங்கள் உண்டாகும்.

சந்திராஷ்டமம் – 30-10-2023 காலை 10.28 மணி முதல் 01-11-2023 மாலை 04.10 மணி வரை மற்றும் 26-11-2023 இரவு 07.55 மணி முதல் 29-11-2023 அதிகாலை 01.40 மணி வரை.

 

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை


அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 12 மற்றும் ஜென்மராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரம் ஆகும். சனி 4-ல் சஞ்சரிப்பதால் அலைச்சல், டென்ஷன் தேவையற்ற மனக்கவலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றாலும் கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து நடந்து கொண்டால் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமைந்து தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும் எதிலும் சிக்கனத்துடன் இருப்பது, ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பண உதவிகள் கிடைத்து நீங்கள் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள்.

திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு ஆதரவுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனமுடன் நடந்து கொண்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டி இருந்தாலும் எதிர்பார்த்த லாபத்தினை பெறுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது உத்தமம்.

பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைபளு அதிகமாக இருக்கும். தங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம் – ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வதும், முருக வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும்.

சந்திராஷ்டமம் – 01-11-2023 மாலை 04.10 மணி முதல் 04-11-2023 அதிகாலை 01.23 மணி வரை மற்றும் 29-11-2023 அதிகாலை 01.40 மணி முதல் 01-12-2023 காலை 10.12 மணி வரை.

 

தனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்


அன்புள்ள தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சனி பலமாக சஞ்சரிப்பதும், 10-ல் சுக்கிரன், மாத முற்பாதியில் 11–ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் உங்களுக்கு உள்ள சோதனைகள் எல்லாம் விலகி வளமான பலன்களை பெறுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமும், மகிழ்ச்சியும் ஏற்படும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை அற்புதமாக இருக்கும். உங்கள் பலம் அதிகரித்து எதிரிகளின் பலம் குறையும் காலமாகும்.

உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றிகளைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.

தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடந்த கால கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுப்பது மூலம் அன்றாட பணிகளில் தெம்புடன் செயலாற்றுவீர்கள்.

பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று குறைந்து பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். ஒரு சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும்.

பரிகாரம் – பார்வதி தேவியையும் துர்கையம்மனையும் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.

சந்திராஷ்டமம் – 04-11-2023 அதிகாலை 01.23 மணி முதல் 06-11-2023 பகல் 01.22 மணி வரை.

 

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்


அன்புள்ள மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 9-ல் சுக்கிரன், 10, 11–ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து நல்ல வளர்ச்சியினை அடைவீர்கள். எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் அதனை எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியை பெறுவீர்கள்.

கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தொழிலாளர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பார்த்த பண வரவுகள் கிடைத்து உங்களுக்கிருந்த கடன் பிரச்சினைகள் குறையும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.

உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவதுடன் எதிர்பார்த்த பதவி உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். அரசு வழியில் அனுகூலங்கள் உண்டாகும். பண வரவுகள் ஓரளவு சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். புதிய வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும்.

2-ல் சனி இருப்பதால் கணவன்- மனைவி இடையே பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. உற்றார், உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு, மந்த நிலை ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. கொடுக்கல்- வாங்கலில் சாதகமான பலன்களே கிடைக்கும்.

பரிகாரம் – வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தேவிக்கு நெய் தீபம் ஏற்றி தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து மகாலட்சுமி தேவி ஸ்லோகங்கள் படித்து வழிபட்டு வந்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

சந்திராஷ்டமம் – 06-11-2023 பகல் 01.22 மணி முதல் 09-11-2023 அதிகாலை 02.00 மணி வரை.

 

கும்பம் அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்


அன்புள்ள கும்ப ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சனி, 2-ல் ராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சூரியன், செவ்வாய் இம்மாதத்தில் 9, 10-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன் மூலம் இருக்கக்கூடிய பிரச்சனைகள் குறையும். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள், எதிர்பாராத உதவியால் ஏற்றங்களை அடையக்கூடிய யோகம் உண்டாகும்.

பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரம் என்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது, பேச்சில் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களையும், குடும்ப உறுப்பினர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

கடன்களும் சற்று குறைந்து மனநிம்மதி ஏற்படும். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியை அளிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலை இருக்கும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்.

பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறைந்து பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்துடன் சேர்ந்து வாழும் வாய்ப்பு அமையும். வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ற நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

பரிகாரம் – சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதாலும், அனுமனை வழிபடுவதாலும், ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உதவுவதாலும் கஷ்டங்கள் குறைந்து நிம்மதி ஏற்படும்.

சந்திராஷ்டமம் – 09-11-2023 அதிகாலை 02.00 மணி முதல் 11-11-2023 பகல் 01.00 மணி வரை.

 

மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி


அன்புள்ள மீன ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் ராகு, 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானத்தோடு இருக்க வேண்டிய நேரம் ஆகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு இடையூறுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும்.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது, வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமுடன் இருப்பது நல்லது. கணவன்– மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் முன் கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம்.

பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். தற்போது குரு வக்ர கதியில் இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டும். குறிப்பாக ஏழரைச் சனியும் நடப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சாதகமான பலனை அடையலாம். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்தே எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். வேலையாட்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவது உத்தமம்.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
பரிகாரம் – துர்க்கையம்மனுக்கு கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபாடு செய்வதாலும், முருக கடவுளை வழிபாடு செய்வதாலும் நற்பலன்கள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் – 11-11-2023 பகல் 01.00 மணி முதல் 13-11-2023 இரவு 09.17 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

01.11.2023 ஐப்பசி 15 ஆம் தேதி புதன்கிழமை சதுர்த்தி திதி மிருகசீருஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் தனுசு இலக்கினம். தேய்பிறை

03.11.2023 ஐப்பசி 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சஷ்டி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் தனுசு இலக்கினம். தேய்பிறை

10.11.2023 ஐப்பசி 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவாதசி திதி ஹஸ்தம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.00 மணி முதல் 08.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். தேய்பிறை

16.11.2023 ஐப்பசி 30 ஆம் தேதி வியாழக்கிழமை திருதியை திதி மூலம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் தனுசு இலக்கினம். வளர்பிறை

19.11.2023 கார்த்திகை 03 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி திருவோணம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் தனுசு இலக்கினம். வளர்பிறை

23.11.2023 கார்த்திகை 07 ஆம் தேதி வியாழக்கிழமை ஏகாதசி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.30 மணி முதல் 10.00 மணிக்குள் தனுசு இலக்கினம். வளர்பிறை

29.11.2023 கார்த்திகை 13 ஆம் தேதி புதன்கிழமை துவிதியை திதி மிருகசீருஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 10.00 மணி முதல் 11.00 மணிக்குள் மகர இலக்கினம். தேய்பிறை

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *