
Shakib Al Hasan
வங்காளதேச கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடருக்கான கேப்டன் அறிவிக்கப்பட்டுள்ளார்…
டாக்கா: வங்காளதேச கிரிக்கெட் அணி வரும் 30-ம் தேதி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் விளையாட உள்ளது. அதனை அடுத்து சொந்த ஊரில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதன் பின் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது.
இந்நிலையில் வங்காளதேச அணியின் ஒருநாள் போட்டியின் கேப்டன் பதவியிலிருந்து தமிம் இக்பால் திடீரென விலகினார். மேலும் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்தும் விலகியுள்ளார். இதனையடுத்து புதிய கேப்டனை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் வங்காளதேச கிரிக்கெட் வாரியம் இறங்கியது. அதன்படி வங்காளதேச கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடருக்கான கேப்டனாக ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஷகிப் ஏற்கெனவே வங்காளதேச ஒருநாள் கிரிக்கெட் அணிக்குக் கேப்டனாகச் செயல்பட்டு உள்ளார். அவர் இறுதியாக 2017-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கேப்டனாகச் செயல்பட்டார். ஷகிப் கடந்த 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரிலும் வங்காளதேச அணியை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

