
டெல்லி: மணிப்பூர் கொடூரத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கத்தால் நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் ஊர்வலமாக ஆண்களால் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து இன்று மவுனம் கலைத்த பிரதமர் மோடி, மணிப்பூரில் பெண்கள் அவமதிக்கப்பட்டதைக் கண்டு பெரும் கோபம் ஏற்படுகிறது.
மணிப்பூர் சம்பவம் பெரும் வேதனையை கொடுத்துள்ளது; எனது இதயம் கனத்துள்ளது. மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகளை என்றும் மன்னிக்க மாட்டோம். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தப்பிக்க விட மாட்டோம், பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை கண்டு தான் கோபத்தில் இருப்பதாக ஆவேசமாக பேசினார். இந்தியாவின் தாய் மற்றும் சகோதரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து, நாட்டில் பல்வேறு பரபரப்பான சூழல்களுக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. அச்சமயம் மணிப்பூர் கலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். மணிப்பூர் எரிந்து கொண்டிருக்கும்போது பிரதமர் வெளியில் மட்டும் பேசுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தனர். மணிப்பூர் கொடூரம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் கூட்டம் தொடங்கிய சிறுது நேரத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து மீண்டும் பிற்பகல் 12 மணியளவில் கூட்டம் தொடங்கியதும், மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்க வேண்டும், பிரதமர் நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். இதன் காரணமாக மீண்டும் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 2 மணியளவில் அவை கூடியதும், மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறை குறித்து உடனடியாக விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்தனர்.
உடனடியாக விவாதத்துக்கு எடுக்க முடியாது என்று அவைத் தலைவர் கூறியதால் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மழைக்கால கூட்டத்தொடரின் முதல்நாளிலேயே நாடாளுமன்றம் முடங்கியது குறிப்பிடத்தக்கது.

