பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சையா? – விமர்சனங்களுக்கு மேயர் பிரியா பதிலடி.!

சென்னை மாநகராட்சியின் முதல் தலித் பெண் மேயரான பிரியா, சமீபகாலமாகத் தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தனது மனக்குமுறலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘நான் எது செய்தாலும் சர்ச்சையாக்குகிறார்கள். ஒரு பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை, சிகை அலங்காரம் செய்தாலும் சர்ச்சையா? அரசியலில் ஈடுபடும் பெண்கள் ஒழுக்கமற்றவர்களோ அல்லது மரியாதைக்குத் தகுதியற்றவர்களோ அல்ல’ என்று ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘பொதுவாழ்வில் இருக்கும் ஒரு பெண்ணின் தோற்றம் மற்றும் வாழ்க்கை முறையை வைத்து அவரை மதிப்பிடும் உரிமை யாருக்கும் இல்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் தங்கள் வாழ்க்கையைத் தங்கள் விருப்பப்படி அமைத்துக்கொள்ளும் உரிமை உள்ளது. மேயர் என்ற பதவியைத் தாண்டி, ஒரு பெண்ணை மதிக்க வேண்டும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கேள்வி எழுப்பியுள்ள அவர், ‘எனது தனிப்பட்ட வாழ்க்கைக்காக நான் எடுக்கும் முடிவுகள் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன. ஒரு பெண் என்பதால் இப்படி எல்லாம் நடக்கிறதா? அல்லது குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண் என்பதால் இப்படி நடக்கிறதா? எனது விஷயத்தில் பெண்ணியவாதிகளும், பெண்களுக்காகக் குரல் கொடுப்பவர்களும் எங்கே சென்று மறைந்துவிட்டனர்?’ என்றும் காட்டமாகச் சாடியுள்ளார்.

மேயர் பிரியாவின் இந்த அதிரடிப் பதிவு, பொதுவாழ்வில் பெண்களுக்கு எதிராக நடக்கும் ‘உருவக் கேலி’ மற்றும் ‘தனிப்பட்ட வாழ்க்கை விமர்சனங்கள்’ குறித்த புதிய விவாதத்தைத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *