சிறுமிக்கு எதிரான போக்சோ வழக்கில் கைதாகியுள்ள ஜெம் வீரமணிக்கு உடந்தையாகச் செயல்பட்ட சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹனுக்கு ஜாமீன் வழங்கக் காவல் துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இவர்களின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை செப்டம்பர் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தையே உலுக்கிய ஜெம் வீரமணி போக்சோ வழக்கில், அவருக்கு உடந்தையாக இருந்ததாகச் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகிய இருவரையும் காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்தது.
இந்த நிலையில், தங்களுக்கு ஜாமீன் கோரி இருவரும் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் தொடர்புடைய இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது எனத் காவல் துறை தரப்பில் மிகக் கடுமையான ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
வழக்கின் விசாரணை முக்கியக் கட்டத்தில் இருப்பதால், இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களைக் கலைக்க வாய்ப்புள்ளதாகக் காவல் துறை நீதிமன்றத்தில் வாதிட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம், சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹனின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை வரும் செப்டம்பர் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.”



