Suicide: ஒரே நேரத்தில் 2 நண்பர்களைக் காதலித்த மாணவி!

Advertisements

Suicide | Illicit relationship | Visakhapatnam

ஒரே நேரத்தில் 2 நண்பர்களைக் காதலித்த மாணவி, மாணவர் பயத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது…

திருப்பதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் சாய்குமார் (வயது 23). இவரது நண்பர் சூரிய பிரகாஷ் (25). அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி நண்பர்கள் இருவரையும் தனித்தனியாகச் சந்தித்து வந்தார். நாளடைவில் இருவருக்கும் மாணவி காதல் வலை வீசினார். இதனையெடுத்து சாய்குமார், சூரியபிரகாஷ் இருவரும் மாணவியிடம் தங்களது காதலை வெளிப்படுத்தினர். இவர்கள் இரண்டு பேரையுமே மாணவி காதலித்து வந்தார். ஒருவருக்கு தெரியாமல், இன்னொருவரை காதலித்து வந்துள்ளார்.

இதனால், அந்த 2 பேருமே, மாணவி தன்னை மட்டுமே உயிருக்குயிராக நேசிப்பதாக நினைத்தனர். மாணவி மீதுள்ள காதலால், அளவுக்கு அதிகமான அன்பையும் கொட்டி பழகி வந்தனர். சாய்குமாரும், சூரியபிரகாஷூம் நண்பர்கள் என்றாலும், மாணவியைக் காதலிப்பதை ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளவில்லை. இதுதான் மாணவிக்கு ரொம்ப வசதியாகிவிட்டது. அவர் 2 வாலிபர்களுடனும் உல்லாசமாகச் சுற்றித்திரிந்தார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு, மாணவி சாய்குமார் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள லாட்ஜில் அறை எடுத்துத் தங்கினர். அப்போது சாய்குமார் லாட்ஜ் அறையில் வைத்து மாணவிக்குத் தாலி கட்டினார். இதனைச் செல்போனில் வீடியோ, போட்டோ எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வீடுகளில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் சாய்குமார் மாணவிக்குத் தாலி கட்டிய வீடியோவை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. தன்னுடைய காதலிக்கு நண்பன் சாய்குமார், தாலி கட்டும் வீடியோக்களைப் பார்த்துச் சூரியபிரகாஷ் பெருத்த அதிர்ச்சி அடைந்தார். இதனால், நேரடியாகவே அந்த மாணவியிடம் இதுபற்றிக் கேட்டார் அப்பட்டமாக வீடியோ வந்துவிட்டதால், அந்த மாணவி உண்மையை ஒப்புக்கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சூரியபிரகாஷ், நேராகச் சாய்குமாரிடம் சென்றார். சூரியபிரகாஷ் மாணவி தன்னையும் காதலித்து நடித்தது பற்றிப் புட்டு புட்டு வைத்தார்.

இதைக்கேட்டு, சாய்குமாருக்கு தலையே கிறுகிறுத்து போய்விட்டது. இதற்கு ஒரு முடிவு எடுத்தாக வேண்டும் என இருவரும் முடிவு செய்தனர். உடனடியாக நண்பர்கள் இருவரும் மாணவியின் வீட்டுக்குப் போனார்கள். அந்தப் பெண்ணின் வீட்டில், பெற்றோர்களும், குடும்ப உறுப்பினர்களும் இருந்தனர்.

அனைவரது முன்னிலையிலும் மாணவியிடம் இதுகுறித்து 2 காதலர்களும் கேள்வி எழுப்பினார்கள். இந்த முக்கோண காதல் விவகாரத்திற்கு, ஒரு முடிவைச் சொல்லுமாறும் கேட்டார்கள். இப்படி 2 பேருமே திடுதிப்பென்று வீட்டுக்குள் வந்து, கேள்வி எழுப்புவார்கள் என்று மாணவி கொஞ்சமும் நினைக்கவில்லை.

இதனால் அதிர்ச்சியும், அவமானமும் கலந்து கூனிக்குறுகி நின்றார். தினம் தினம் அவமானத்தில் தவித்தார். 2 காதலின் குட்டு வெளிப்பட்டதுடன், வீடியோவும் கசிந்துவிட்டதே என்று மனம் கலங்கி போனார். கடைசியில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மாணவி தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது தந்தை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சூரியபிரகாஷ் பயந்துவிட்டார். எங்கே தன்னை போலீசார் கைது செய்து விடுவார்களோ? என்று நினைத்து, ஓடும் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

மைனர் பெண்ணுக்குத் தாலி கட்டியதாகச் சாய்குமார் மீது, வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். 2 பேரைக் காதலிப்பதாக 12-ம் வகுப்பு மாணவி நடித்து மோசடி செய்ததன் விளைவு, 2 உயிர்கள் பறிபோயிருக்கிறது. ஒருவர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *