‘பருத்திவீரன் படம் பார்த்த பிறகு வேறொருவராக இருந்தால் நிச்சயம் கார்த்திக்கு பெண் கொடுத்திருக்க மாட்டார்கள்’ – மூத்த நடிகர் சிவகுமார் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தனது மகன் கார்த்தி குறித்துப் பேசியுள்ள இந்தச் பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மூத்த நடிகர் சிவகுமார், தனது வாழ்க்கைப் பயணம் மற்றும் சினிமா அனுபவங்கள் குறித்துப் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், ‘கல்வியும் ஒழுக்கமும் இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும். சூலூர் அருகே உள்ள காசி கவுண்டன்புதூர் கிராமத்தில் 1957-ல் பத்தாம் வகுப்பு முடித்த ஒரே ஆள் நான் தான். மெட்ராஸ் வந்து 7 ஆண்டுகள் ஓவியம் படித்தேன். பின்னர் அது சரியாக வராது என முடிவு செய்து சினிமாவுக்குள் நுழைந்தேன். சினிமா நிரந்தரமில்லாத தொழில் என்பதால், 38 படங்களில் நடித்த பிறகே திருமணம் செய்து கொண்டேன்’ என்று தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்தார்.
தொடர்ந்து தனது மகன் கார்த்தியின் திருமணம் குறித்துப் பேசிய சிவகுமார், ‘அக்காலத்தில் சினிமாக்காரனுக்கு பொண்ணு தர மாட்டோம் என்று சொன்னார்கள். அதுபோல, பருத்திவீரன் படத்தைப் பார்த்துவிட்டு வேறு யாராவது இருந்தால் கார்த்திக்கு பெண் கொடுத்திருக்கவே மாட்டார்கள். அப்படியொரு ராட்சத வேடத்தில் அவர் நடித்திருந்தார். நானே வேறொருவராக இருந்திருந்தாலும் பொண்ணு கொடுத்திருக்க மாட்டேன். எந்த நம்பிக்கையில் கார்த்திக்கு பெண் கொடுத்தார்கள் என்றே தெரியவில்லை’ என்று நகைச்சுவையாகவும் வியப்பாகவும் பேசினார்.
சிவகுமாரின் இந்தத் தந்தைக்கே உரித்தான கலகலப்பான பேச்சு, அரங்கத்தில் இருந்தவர்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.”

