
கோவை சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம் உள்ள காலி இடத்தில், தனியார் கல்லூரி ஒன்றில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவர், நேற்று இரவு 11 மணியளவில் தனது ஆண் நண்பரான வினித் என்பவருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், இருவரையும் தாக்கியுள்ளது. முதலில் வினித்தை கடுமையாகத் தாக்கிய அந்த கும்பல், பின்னர் அந்த மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
தாக்குதலில் படுகாயமடைந்த வினித், இது குறித்து உடனடியாக காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பீளமேடு காவல்துறையினர், அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த மாணவியை நிர்வாண நிலையில் மீட்ட காவல்துறையினர், உடனடியாக அவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். கொடூரத் தாக்குதலுக்கு உள்ளான வினித், படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டு தப்பி ஓடிய 3 குற்றவாளிகளையும் பிடிக்க, பீளமேடு காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். சம்பவ இடத்திலிருந்து, மாணவியின் ஆண் நண்பருக்குச் சொந்தமான வெள்ளை நிற Swift கார் மீட்கப்பட்டுள்ளது. அந்தக் கார் கும்பலால் தாக்கப்பட்டு, கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. காருக்குள் பெண்களின் ‘மணி பர்ஸ்’ ஒன்றும், உடைந்த கண்ணாடிச் சில்லுகளும் கிடந்தன. மீட்கப்பட்ட கார், ஆதாரமாக பீளமேடு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்த மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர், துணை ஆணையர் தேவநாதன் உள்ளிட்ட உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் கொண்ட கும்பலை பிடிக்க துணை ஆணையர் தலைமையில் ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மூன்று இளைஞர்களும் கஞ்சா போதையில் இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இதனை தொடர்ந்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கோவை சர்வதேச விமான நிலையம் அருகில், நேற்று இரவு, நண்பருடன் பேசிக் கொண்டிருந்த சட்டக் கல்லூரி மாணவி, மூன்று சமூக விரோதிகளால் கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி விரைந்து நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீதோ, காவல்துறையின் மீதோ சிறிதும் பயமில்லை என்பதையே, பெண்களுக்கெதிரான இது போன்ற தொடர் குற்றச் செயல்கள் காட்டுகின்றன. திமுக அமைச்சர்கள் முதல், காவல்துறையினர் வரை, பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் போக்கையே மேற்கொள்கின்றனர். பாலியல் குற்றங்களைத் தடுக்கவோ, பெண்களுக்கு பாதுகாப்பளிக்கவோ, திமுக ஆட்சி தவறிவிட்டது.
பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ, காவல்துறையினரைப் பயன்படுத்தாமல், திமுக அரசை விமர்சிப்பவர்களைக் கைது செய்ய மட்டுமே பயன்படுத்துவதால், தமிழகம் இன்று இழிநிலையில் இருக்கிறது. இப்படி ஒரு கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருக்கும் காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் திரு @mkstalin , வெட்கித் தலைகுனிய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கையில்,
இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநிலம் முழுவதும் இந்த சம்பவம் பரவலான கண்டனத்தையும் அரசின் பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இதேபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும், கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் காவல் துறை என்ன செய்கிறது என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
பாஜக தலைவர் நாகேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில் நமது வீட்டுப் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுவதாகவும், முதலமைச்சரோ கவலையின்றிக் கம்பு சுற்றிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி விடுத்துள்ள அறிக்கையில், கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது திமுக ஆட்சியில் மாணவிகளுக்குப் பாதுகாப்பில்லை என்பதற்கான சான்றாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி விடுத்துள்ள அறிக்கையில் , தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாகவும், இதற்குத் தமிழக அரசும், காவல்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்திக் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவி பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு திசம்பர் 23-ஆம் நாள் மனித மிருகத்தால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இப்போது கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.திமுக ஆட்சியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. தமிழ்நாட்டில் போக்சோ எனப்படும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தின்படி 2024-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 6975 ஆக அதிகரித்திருக்கிறது. 2023-ஆம் ஆண்டு இதே சட்டத்தின்கீழ் பதிவான 4581 வழக்குகளுடன் ஒப்பிடும் போது இது 2394 , அதாவது 52.30% அதிகம் ஆகும். இதற்கு தமிழக அரசும், காவல்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும்.
கோவையில் தனியார் கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு தரமான மருத்துவமும், மனநல ஆலோசனையும் வழங்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் விற்பனைக்கு முடிவு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் , திருவள்ளூர் சிறுமி பாலியல் பலாத்காரம் , திருவண்ணாமலையில் தாயின் கண்முன்னே காவல்துறையினரால் மகள் பலாத்காரம் செய்யப்பட்டது ,
தற்போது கோவையில் நடந்த இந்த சம்பவம் போன்ற நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக ஆளும் மத்திய , மாநில அரசுகள் எந்த மாதிரியான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகிறது என்பது நம் நாட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




