வெளிநாடுகளில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்காக, தமிழக அரசின் சமூக நீதித் துறையால் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், ஒரு மாணவரின் கல்விக்கட்டணம் மற்றும் வெளிநாட்டு வாழ்க்கைச் செலவினங்கள் என அனைத்தையும் சேர்த்து ஆண்டிற்கு அதிகபட்சமாக 36 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
மலேசியாவிலுள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில், திசுப் பொறியியல் மற்றும் மீளுருவாக்கம் மருத்துவம் அதாவது Tissue Engineering and Regenerative Medicine பிரிவில் Ph.D படிப்பதற்காக மாணவர் பாரதிதாசன் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டார். இவர் தனக்கு இரண்டாம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என்று அவர் கண்ணீர் மல்கக் வீடியோ வெளியிட்டிருந்தார். அதற் பதிலளித்து சமூகநீதித்துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், இவருக்கு முதலாம் கல்வி ஆண்டான 2025-2026 இல் கல்விக்கட்டணம், விசா மற்றும் விமானக் கட்டணம், வாழ்க்கைச் செலவினங்கள், ஆராய்ச்சிச் செலவினம் என மொத்தம் 36 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகையாக முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.ஆனால், விசா மற்றும் விமானக் கட்டணம் தவிர்த்து, ஆராய்ச்சி மற்றும் வாழ்க்கைச் செலவினங்களுக்காகப் பெற்ற தொகைக்கு உரிய செலவுப்பட்டியலைச் சமர்ப்பிக்குமாறு மாணவரிடம் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மாணவர் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்காமல் இரண்டாம் ஆண்டிற்கான முழுத் தொகையையும் கோரியுள்ளார். இருப்பினும், மாணவரின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, அவர் பல்கலைக்கழகத்திற்குச் செலுத்த வேண்டிய முழுமைக் கல்விக்கட்டணமாக 5.57 லட்சம் ரூபாயும், வாழ்க்கைச் செலவினமாக 6.65 லட்சம் ரூபாயும் என ஆக மொத்தம் 12 லட்சம் ரூபாய் இரண்டாம் கல்வியாண்டிற்காக தமிழக அரசு சார்பில் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுவிட்டது.
இதனைத் தொடர்ந்து, இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சிச் செலவினங்களுக்காக மேலும் 19.50 லட்சம் ரூபாய் விடுவிக்குமாறு மாணவர் கோரியுள்ளார். ஆனால், அவர் சமர்ப்பித்த உத்தேச செலவினப் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகப் பதிவாளரால் பரிந்துரை செய்யப்படவில்லை. மேலும், முதலாமாண்டில் ஆராய்ச்சிச் செலவினங்களுக்காக அவர் வாங்கிய பொருட்கள் மற்றும் அதற்கான கட்டண ஆவணங்கள் திருப்திகரமாக இல்லை என கடந்த ஆகஸ்ட் 20 அன்றே விளக்கம் கேட்கப்பட்டும் கூட,
மாணவர் முறையான விளக்கம் அளிக்கவில்லை. இது தொடர்பாகப் பல்கலைக்கழகப் பதிவாளரிடம் இருந்து உறுதிப்படுத்தல் பதில் கிடைத்தவுடன் மீதித் தொகை உடனடியாக விடுவிக்கப்படும் என்று செப்டம்பர் 17 அன்று சமூகநீதி துறை சார்பில் மின்னஞ்சலும் அனுப்பப்பட்டுள்ளது.இதுவரை அந்த மாணவருக்கு முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு என மொத்தம் 48 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ள நிலையில், உண்மைக்கு மாறான தகவல்களைக் காணொலியாகப் பதிவிட்டு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த மாணவர் முயன்றுள்ளதாக சமூக நீதித்துறை சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தை தான் தவறாகப் பயன்படுத்தவில்லை என மாணவர் பாரதிதாசன் தரப்பிலிருந்து மீண்டும் ஒரு வீடியோ மூலம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 37 லட்சத்திற்கான பில் அனுப்பினேன், 36 லட்சம் உதவித்தொகை தந்தார்கள். பில் அனுப்பவில்லை என மீண்டும் மீண்டும் கட்டுக்கதை கட்டுகிறார்கள். ஆராய்ச்சி செலவுகளுக்கான பில் அனைத்தும் ஆகஸ்ட் 26-ந்தேதியே அனுப்பிவிட்டேன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மாணவர் பாரதிதாசன்காக பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரக்கூடிய நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், முடியலைனா சொல்லுங்க முதல்வரே, நாங்க திமுகவும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவரை படிக்க வைக்குறோம்னு தெரிவித்துள்ளார்.ஒருபுறம் அரசாங்கம் ஆவணங்கள் மற்றும் பல்கலைக்கழகப் பரிந்துரையின் அடிப்படையிலேயே நிதி வழங்கப்படுவதாகத் தெளிவுபடுத்தியுள்ள நிலையில்,
மறுபுறம் மாணவர் தரப்பு தாங்கள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்துவிட்டதாகக் கூறிவருகிறது. இதில் உண்மையை மறைப்பது யாரோ அல்லது விளம்பரத்துக்காக அரசைச் சேற்றில் வாரி இறைப்பது யாரோ? தீவிர விசாரணைக்குப் பின்னரே உண்மை வெளிவரும்! இது குறித்த உங்களது கருத்துகளை கமெண்ட்ஸ் பதிவிடுங்கள்.

