
கோவில் நகரமான மதுரை தொழில் நகரமாகப் புகழ்பெற வேண்டும் என்பதே தனது ஆசை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை மேலமடை சந்திப்பில் வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதை தொடர்ந்து, மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 56 ஆயிரத்து 766 இளைஞர்களின் புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகை ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, மேலூரில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதன் பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டில் பேசியபோது, ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டியது அவசரம் என உணர்ந்ததாகவும் தமிழகத்தின் வளர்ச்சி பயணத்தில் முதலீட்டாளர்களின் பங்கு மிகவும் முக்கியம் என்றும் கூறினார். இதை யடுத்து, புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80 சதவீத முதலீடுகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் கோவில் நகரமான மதுரை தொழில் நகரமாகவும் புகழ்பெற வேண்டும் என்பதே தனது ஆசை என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஸ்டாலின், விருதுநகரில் உருவாகி வரும் ஜவுளி பூங்காவால் 1 லட்சத்திற்கும் மேலானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.



