
சுங்குவார்சத்திரம் பகுதி மக்களின் பல வருட கோரிக்கையை நிறைவேற்றிய ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர்பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்து பயணிகளுடன் அரசு பேருந்தை இயக்கி அசத்தினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.
மேலும் இப்பகுதியில் இருந்து சென்னையின் புறநகர் பகுதியான தாம்பரம் செல்வதற்கு நேரடியாக பேருந்து வசதி இல்லை அதற்காக ஸ்ரீபெரும்புதூர் சென்று ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஒரகடம் படப்பை வழியாக தான் தாம்பரம் செல்ல வேண்டிய சூழல் இருந்து வந்தது
சுங்குவார்சத்திரம் முதல் தாம்பரம் வரை அரசு பேருந்து சேவை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு பல வருடங்களாக கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில் சமீபத்தில் புதியதாக கொள்முதல் செய்யப்பட்ட BS6 ரக பேருந்துகளில் காஞ்சிபுரம் போக்குவரத்து மண்டலத்திற்கு 2 பேருந்துகள் ஒதுக்கப்பட்டது.
அதன்படி சுங்குவார்சத்திரம் முதல் தாம்பரம் வரையிலான தடம் எண் 81C என்ற போக்குவரத்து சேவையை ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை கொடியசைத்து துவங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பேருந்தில் ஏறிய பயணிகளுடன் புதிய பேருந்தை சிறிது தூரம் இயக்கி பிறகு ஓட்டுநரிடம் வழங்கினார்.
சட்டமன்ற உறுப்பினர் அரசு பேருந்தை இயக்கிய நிகழ்வு பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுடன் புதிய வழித்தடம் அமைத்து பல வருட கோரிக்கையை நிறைவேற்றிய ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகைக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


