
சென்னை: பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக 3 நாள் பயணமாகத் தமிழகம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடி, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளைத் தொடங்கி வைக்கவுள்ளார்.
தமிழகத்துக்கு 3 நாள் பயணமாக வரும் பிரதமர் நரேந்திர மோடி, சென்னையில் கேலோ இந்தியா போட்டிகளை இன்று தொடங்கி வைக்கிறார். கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் வரும் 19-ம் தேதி முதல் 31-ம் தேதிவரை சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (ஜன.19) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. போட்டிகளைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
இதில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி, பெங்களூருவிலிருந்து விமானத்தில் புறப்பட்டு வெள்ளிக்கிழமை மாலை 4.50 மணிக்குச் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அமைச்சர்கள் வரவேற்றனர். பாஜக தலைவர்கள் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் உள்பட 27 பேர் பிரதமரை வரவேற்கும் வரவேற்பு குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
பிரதமர் மோடி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர்மூலம், ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்தை வந்தடைந்து, பின்னர், அங்கிருந்து காரில் நேரு உள்விளையாட்டு அரங்கம் வருகிறார். வழிநெடுகிலும் அவருக்குத் தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்திலிருந்து நேப்பியர் பாலம் வழியாகச் சிவானந்தா சாலை, பல்லவன் சாலை, சென்ட்ரல் ரயில் நிலையம், ரிப்பன் மாளிகையைக் கடந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்தை பிரதமர் வந்தடைகிறார். பிரதமரின் வருகையையொட்டி தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.



