
விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் வெளியான இந்த படம் விஜயகாந்த் ரசிகர்களை மட்டுமல்ல அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இந்தப் படம் மூலம் அவருக்கு ‘கேப்டன்’ என்ற அடைமொழி கிடைத்தது.
கேப்டன் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். சரத்குமார், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், காந்திமதி என பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் வெளியாகி 34 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது நவீன 4K தொழில்நுட்பங்களுடன் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு புது வடிவம் பெற்று, இன்று வெளியாகியிருக்கிறது.
தமிழகமெங்கும் சுமார் 500 திரையரங்குகளில் இப்படம் வெளியாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டிருக்கும் நிலையில், தனது மகன் விஜயபிரபாகரன், சகோதரர் சுதீஷ் ஆகியோருடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கடலூரில் படத்தை பார்த்தார். அப்போது தன்னை அறியாமல் திரையில் விஜயகாந்தைப் பார்த்து பிரேமலதா மற்றும் மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் அழுதனர்.



