
தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதா இல்லையா என்பது குறித்து இன்று ஓ பன்னீர் செல்வம் முடிவு எடுப்பதாக தெரிகிறது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டம் நேற்றும், இன்று நடக்கின்ற நிலையில் இந்த கூட்டத்தின் முடிவில் ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து இது தொடர்பாக அறிவிப்பார் என அதிமுக எம் எல் ஏ வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி சென்னையில் அதிமுக – பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். பாஜவுடன் கூட்டணியே கிடையாது என்று கூறி வந்த அதிமுக பாஜவுடன் கூட்டணி வைத்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வரும் டிடிவி தினகரனின் அமமுக வும், ஓபிஎஸ்சின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் நிலையும் கேள்விக்குறி ஆகியுள்ளது.
ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்து வருகிறார். இதற்கு மத்தியில் தான் சட்டசபை தேர்தலுக்கு எப்படி தயார் ஆவது என்பது குறித்து ஆலோசிக்க அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று சென்னை ராயப்பேட்டையில் தொடங்கியது. நேற்று நடந்த கூட்டத்தில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது, 2026 சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த கருத்து கேட்புக்கான கடிதம் வழங்கப்பட்டு பெறப்படுகிறது.
அப்போது அவர் கூறும்போது, அதிமுக – பாஜக இணைந்து அமைத்துள்ள என்டிஏ கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது. நிர்வாகிகளுடைய கருத்துக்கள் கேட்கப்படுகிறது. நாளை இது பற்றி முடிவு எடுக்கப்படும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்கிறோமோ என்பதை நாளை செய்தியாளர்களைச் சந்தித்து ஓபிஎஸ் விளக்கம் கொடுப்பார்” என்று கூறியிருந்தார்.




