அதிரடி மாற்றம்: சென்னை கமிஷனராக ஏ. அமல்ராஜ் நியமனம்!

Advertisements

சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த அபின் தினேஷ் மோடக் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக கூடுதல் டி.ஜி.பி. ஏ. அமல்ராஜ் அவர்கள் புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று ((மே 22) காலை அவர் தனது புதிய பொறுப்பை முறைப்படி ஏற்றுக்கொள்கிறார். முந்தைய ஆணையர் அபின் தினேஷ் மோடக் அவர்கள், சி.பி.சி.ஐ.டி. கூடுதல் காவல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1996-ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரியான ஏ. அமல்ராஜ் அவர்கள், திருப்பூர் மாவட்டத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக தனது பணியைத் தொடங்கி, படிப்படியாகப் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். மதுரை, தர்மபுரி, தேனி, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் பணியாற்றிய அவர், திருச்சி, சேலம் ஆகிய சரகங்களில் டி.ஐ.ஜி.-யாகவும் முத்திரை பதித்தார். கோவை, திருச்சி, சேலம் நகரங்களின் காவல் ஆணையராகவும், சென்னையில் கூடுதல் காவல் ஆணையராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர், தாம்பரம் மாநகர காவல் ஆணையராக இருமுறை சிறப்பாகச் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரியைப் பூர்வீகமாகக் கொண்ட ஏ. அமல்ராஜ் அவர்கள், இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். சிறந்த ஹாக்கி விளையாட்டு வீரராகத் திகழ்ந்த இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டத்தைப் பெற்றுள்ளார். இவர் பணியாற்றிய நகரங்களில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த, நவீன கண்காணிப்பு கேமரா வசதிகளை உருவாக்கியதோடு, கோவை மற்றும் சென்னை எழும்பூரில் காவல்துறை அருங்காட்சியகங்களை அமைப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தார்.

சிறந்த பணிக்காக ஜனாதிபதி விருது மற்றும் தமிழக முதலமைச்சரின் பதக்கங்களைப் பெற்றுள்ள இவர், ஒரு சிறந்த எழுத்தாளரும் ஆவார். காவல்துறையினருக்குத் தேவையான மேலாண்மைப் பண்புகள் மற்றும் தன்னம்பிக்கையை ஊட்டும் வகையில், “வெல்ல நினைத்தால் வெல்லலாம்”, “சிறகுகள் விரித்திடு”, “போராடக் கற்றுக்கொள்”, “வெற்றியாளர்களின் வெற்றிப்படிகள்” உள்ளிட்ட 5 புத்தகங்களை எழுதியுள்ளார்.

இத்தகைய பன்முகத்தன்மை கொண்ட ஏ. அமல்ராஜ் அவர்களின் நியமனம், சென்னை மாநகர சட்டம்-ஒழுங்கு பராமரிப்பில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *