Chennai Airport:ரூ.1.08 கோடி மதிப்புடைய, 1.65 கிலோ தங்கம் பறிமுதல்!

Advertisements

துபாய் மற்றும் தாய்லாந்து நாடுகளிலிருந்து விமானங்களில், சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.1.08 கோடி மதிப்புடைய, 1.65 கிலோ தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.

காலில் அணிந்திருந்த ஷூக்களில் மறைத்து வைத்திருந்த தங்கப் பசை, மற்றும் கவரிங் நகைகள் என்று கூறி, கடத்தி வந்த தங்க நகைகளை, பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், பெண் உட்பட இரண்டு பயணிகளைக் கைது செய்து விசாரணை.

சென்னைக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக, சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், வெளிநாட்டிலிருந்து விமானங்களில், சென்னைக்கு வரும் பயணிகளைத் தீவிரமாகக் கண்காணித்தனர்.

இந்த நிலையில் துபாயிலிருந்து சென்னை வந்த, தனியார் விமான பயணிகளை அதிகாரிகள் கண்காணித்தபோது, சென்னையைச் சேர்ந்த 30 வயது ஆண் பயணி ஒருவர், துபாய்க்கு சுற்றுலா பயணியாகப் போய்விட்டு இந்த விமானத்தில் திரும்பி வந்தார். அவர்மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி அவருடைய உடைமைகளைச் சோதித்தனர். உடைமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல், அவர் அணிந்திருந்த ஷூக்களை கழற்றி பரிசோதித்தனர். இரண்டு ஷூக்களிலும் வைக்கப்பட்டிருந்த, மிதியடிகளை எடுத்துப் பார்த்தனர். அது வழக்கத்தைவிட அதிக கனமாக இருந்தது. எனவே அந்த ஷூக்களின் மிதியடிகளை பிரித்துப் பார்த்தபோது, அதனுள் தங்கப் பசை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதில் ஒரு கிலோ 300 கிராம் தங்கப்பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு, ரூ.85 லட்சம். இதை அடுத்து தங்கப் பசையை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், நூதனமான முறையில் ஷூக்களின் மிதியடிக்குள் மறைத்துத் தங்கத்தை கடத்தி வந்த, சென்னையைச் சேர்ந்த பயணியைச் சுங்க அதிகாரிகள் கைது செய்து, மேலும் விசாரணை நடத்துகின்றனர்.

இதற்கிடையே தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்கிலிருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளைச் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையைச் சேர்ந்த 40 வயது பெண் பயணி ஒருவர், சுற்றுலா பயணியாகத் தாய்லாந்து நாட்டுக்குச் சென்று விட்டு இந்த விமானத்தில் திரும்பி வந்தார். அவர்மீது அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அதோடு அந்தப் பெண் பயணியின் உடைமைகளைச் சோதித்தனர். அதற்குள் 350 கிராம் எடையுடைய தங்க செயின்கள், மற்றும் வளையல் இருந்ததை கண்டுபிடித்தனர். ஆனால் பெண் பயணி, அவைகள் கவரிங் நகைகள் என்று கூறினார். ஆனால் சுங்க அதிகாரிகள் பரிசோதித்தபோது, அது தங்க நகைகள் என்று உறுதியானது. மேலும் அதன் சர்வதேச மதிப்பு ரூ. 23 லட்சம். இதை அடுத்து தங்க நகைகளைப் பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், பெண் பயனியை கைது செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஒரே நாள் இரவில், துபாய், தாய்லாந்து நாடுகளிலிருந்து, சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ. ஒரு கோடி எட்டு லட்சம் மதிப்புடைய, தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதோடு, ஒரு பெண் பயணி உட்பட இரண்டு பேரைக் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *