தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை:பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரில் 12 பேருக்கு தலா ரூ.3.5 கோடி (இந்திய மதிப்பு ரூ. 1 கோடி) அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அபராதத்தை செலுத்தத் தவறினால் மீனவர்கள் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
மீதமுள்ள 10 மீனவர்கள் தொடர்பான வழக்கு வரும் 10-ம் தேதி விசாரணைக்கு வரும்போது அவர்களுக்கும் இதே தண்டனை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக மீனவர்களை ஒடுக்கும் வகையிலான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. மீனவர்கள் தொடர்ந்து ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டால் அவர்களின் குடும்பம் பொருளாதார அடிப்படையில் எப்படியெல்லாம் பாதிக்கப்படும்? மீன்பிடிப்பதை வாழ்வாதாரமாகக் கொண்ட மீனவர்களால் ரூ.1 கோடி அபராதம் எவ்வாறு செலுத்த முடியும் என்பதை இலங்கை அரசு சிந்திக்க வேண்டும்.
வங்கக்கடலில் மீன்பிடிப்பதற்காக தமிழக மீனவர்களுக்கு எந்த வகையிலும் தண்டனை விதிக்க முடியாது என்பதுதான் எதார்த்தம் ஆகும். இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறுகியது. அதனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள்ளும் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைவதை தவிர்க்க முடியாது. அதனால் தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களும் காலம் காலமாக எந்தெந்த பகுதிகளில் மீன்பிடித்து வந்தார்களோ, அதே பகுதியில் தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதிப்பது தான் சரியானதாகும்.
பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதிகளில் மீன் பிடித்ததற்காக தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதையும், சிறையில் அடைப்பதையும் இந்திய அரசு வேடிக்கைப் பார்க்கக்கூடாது. மிகக்குறுகிய பரப்பளவைக் கொண்ட தமிழக இலங்கை கடல் எல்லையை இரு தரப்பு மீனவர்களும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொண்டு மீன் பிடிப்பது தான் இந்த சிக்கலுக்கு தீர்வாகும்.
கடந்த காலங்களில் பலமுறை இத்தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது. இதை உணர்ந்து கொண்டு தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், தமிழக அரசு, இலங்கை அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுக்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.