
தமிழர் ஒருவரைக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக முன்மொழிந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் எடப்பாடி பழனிச்சாமி சாமி தரிசனம் செய்தார். சம்பந்த விநாயகர் கோவிலில் நெய்த் தீபம் ஏற்றித் தேங்காய் உடைத்தார். கொடி மரத்தைத் தொட்டு வணங்கி அண்ணாமலையார் சந்நிதியிலும், பராசக்தி அம்மன் சந்நிதியிலும் சாமி தரிசனம் செய்தார்.
அதன் பின்னர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டுப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, சி.பி. ராதாகிருஷ்ணனுக்குத் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


