ரசிகர்களின் காத்திருப்புக்கு விடை – ‘ஜன நாயகன்’ ஜூலை 23-ல் வெளியீடு!

Advertisements

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ளப் படம் ‘ஜன நாயகன்’. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பில் உருவான இந்தப் படம், இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், தணிக்கை சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால் படம் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. இதனிடையே, படத்தின் முழுக்காட்சியும் இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

விஜய்யின் கடைசிப் படம் இது என்று கூறப்பட்டதால், ரசிகர்கள் இப்படத்தின் வெளியீட்டிற்காக பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால், படத்தின் வெளியீட்டில் ஏற்பட்ட தொடர் சிக்கல்களால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். நீண்ட இழுபறிக்குப் பிறகு, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் தற்போது படத்திற்கு ‘ஏ’ (A) சான்றிதழ் வழங்கி அனுமதி அளித்துள்ளது.

தணிக்கை சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ‘ஜன நாயகன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படம் வரும் ஜூலை 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *