கால்நடைகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதி உயிரிழப்பு!

Advertisements

செங்கல்பட்டு:

மாமல்லபுரம் பழைய ஓஎம்ஆர் சாலை அருகே ஆடு, மாடு மேய்த்துக்கொண்டிருந்த 5 பெண்கள் சாலையோரம் அமர்ந்திருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த கார் மோதியதில் அவர்கள் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பண்டிதமேடு பகுதியில் சாலையோரம் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு இருந்த விஜயா, யசோதா, லோகாம்பாள், கௌரி, ஆனந்தம்மாள் ஆகிய 5 பெண்கள்மீது கார் மோதியதில் ஐவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். அப்போது, திருப்போரூரிலிருந்து மாமல்லபுரம் நோக்கிச் சென்ற கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பெண்கள்மீது மோதியதாகக் கூறப்படுகிறது. சுமார் 120 கி.மீ வேகத்தில் அதிவேகமாக வந்த அந்தக் கார், சாலையோரம் அமர்ந்திருந்த 5 பெண்கள்மீது மோதி இழுத்துச் சென்றுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய காரில் ஓட்டியவர் உள்பட அனைவரும் மது அருந்தி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதில் இருவர் மட்டும் அங்கிருந்த பொதுமக்களிடம் சிக்கினர். மற்ற அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். சிக்கிய இரண்டு பேரை அங்கிருந்த பொதுமக்கள் சராமாரியாகத் தாக்கினர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாமல்லபுரம் போலீசார், அந்த இரண்டு பேரையும் பிடித்துச் சென்றனர்.மேலும், தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்தக் கோரச் சம்பவம் தொடர்பாகத் திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலைமறியல் செய்ததால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *