
புதிய அனல் மின், நீர்மின் நிலையங்கள் அமைக்கத் திமுக ஆட்சியில் பெரிய அளவிலான நடவடிக்கை எடுக்கவில்லை என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழகச் சட்டப்பேரவையில் துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடைபெறுகிறது. இதில், முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் உரையாற்றி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 41 ரூபாயில் இருந்து 44 ரூபாயாக உயர்த்துவதாகத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கப்படும் என்றும், 20 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீத்திறன் வெப்ப மின்நிலையம் நிறுவப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மதுரமங்கலத்தில் 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிப்காட் மூலம் செமி கண்டக்டர் தயாரிப்பு நிறுவனம் அமைக்கப்படும் என்றும், இதன்மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் புதிதாக 196 துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், ஆயிரத்து 762 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின் பகிர்மான மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். கோவையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும் என்றும், திருச்சி மண்டலத்தில் பல்முனைச் சரக்குப் போக்குவரத்து மையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.




