மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு அழைப்பிதழ் விவாதம் – சேகர்பாபு கண்டனம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா அழைப்பிதழில் வருவோர் போவோர் பெயரையெல்லாம் போட முடியாது என அமைச்சர் நிர்மல் குமார் பேசியதற்கு முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்திற்குச் செல்லுமுன் இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் அமைச்சரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, செப்டம்பர் 17ஆம் நாள் மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதாகத் தெரிவித்தார். கோவிலில் நேற்று 79 கல் தூண்கள் கொண்ட வீர வசந்தராயர் மண்டபமும், 8 ஆண்டுகளுக்குப் பிறகு கிழக்கு வாசலும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் பெருமைகள் யாவும் முந்தைய திமுக அரசைச் சாரும் எனவும் கூறினார். குடமுழுக்கு விழா அழைப்பிதழில் வருவோர் போவோர் பெயரெல்லாம் போட முடியாது என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறியதற்குக் கண்டனம் தெரிவித்தார்.
அறங்காவலர் குழுத் தலைவராக இருப்பவர் ருக்மணி பழனிவேல்ராஜன் என்றும், அவர்தம் குடும்பத்தினர் பல தலைமுறையாக அறங்காவலர்களாகச் செயல்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். ஓர் ஆட்சி சட்டத்தின் ஆட்சியாக இருக்க வேண்டுமே தவிரச் சர்வாதிகாரத்தின் ஆட்சியாக இருக்கக் கூடாது என்றும் சேகர்பாபு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *