
கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது…
புதுடெல்லி: கனடாவில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக, கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான எதிர்ப்பு உணர்வு பரப்பப்படுவதால் இந்தியர்கள் எச்சரிக்கையாகவும், விழிப்புடனும், கவனமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்திய எதிர்ப்பாளர்களுள்ள இடங்களுக்கு இந்தியர்கள் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 18ம் தேதி கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியா நகரில் சீக்கிய மத வழிபாட்டு தலம் அருகே ஹர்தீப் சிங் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாகக் கனடா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்தச் சூழ்நிலையில் இம்மாத தொடக்கத்தில் ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் ஜெஸ்டின் டிரூடோ இந்தியா வருகை தந்தார். அவர் இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, கனடாவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகளைக் கனடா அரசு கட்டுப்படுத்த வேண்டுமென டிரூடோவிடம் பிரதமர் மோடி கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். இது இந்தியா – கனடா இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியது.
இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் இந்திய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேறக் கனடா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. கனடாவின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாகக் கனடா நாட்டு தூதரக உயர் அதிகாரி 5 நாட்களில் இந்தியாவிலிருந்து வெளியேறும்படி மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையேயான விரிசல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால் இந்தியாவில் வாழும் கனடா மக்கள் கவனமாக இருக்கும்படி அந்நாட்டு மக்களுக்குக் கனடா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

