Canada:ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டும்.. சொந்த கட்சி எம்.பிக்கள் போர்க் கொடி!

Advertisements

ஒட்டாவா:கனடாவில் வசித்த காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.

இதற்கிடையே இக்கொலை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் கனடா தெரிவித்தது. இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு மோதல் போக்கு அதிகரித்தது. இதற்கிடையே நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்று ஜஸ்டின் சமீபத்தில் தெரிவித்தார்.

இந்த நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராகச் சொந்த கட்சி எம்.பிக்கள் 24 பேர் போர்க் கொடி தூக்கினர். சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியைச் சந்தித்தது. மேலும் கருத்துக் கணிப்புகளில் ஆளும் கட்சியின் செல்வாக்கு சரிந்து இருப்பது தெரியவந்தது. அடுத்த தேர்தலில் ஜஸ்டின் தலைமையிலான லிபரல் கட்சி மோசமாகத் தோற்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஜஸ்டின் மீது எம்.பி.க்கள் சிலர் அதிருப்தி அடைந்து அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தும் கடிதத்தில் கையெழுத்திட்டு உள்ளனர். அந்தக் கடிதத்தில் பிரதமர் பதவியை ஜஸ்டின் ராஜினாமா செய்ய வேண்டும் மற்றும் 4-வது முறையாகத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே பிரதமர் பதவியிலிருந்து ஜஸ்டின் விலக வருகிற 28-ந்தேதி வரை காலக்கெடுவை அதிருப்தி எம்.பி.க்கள் நிர்ணயித்துள்ளனர். சில லிபரல் எம்.பி.க்கள் கூறும்போது, அடுத்த தேர்தலுக்கு முன் ட்ரூடோவை பதவி விலகக் கோரிய கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளோம். அவர் வருகிற 28-ந்தேதிக்குள் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் அல்லது குறிப்பிடப்படாத விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே லிபரல் கட்சி எம்.பிக்களை ஜஸ்டின் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இக்கூட்டம் 3 மணி நேரம் நடந்தது. அப்போது ஜஸ்டின் பதவி விலக வலியுறுத்தும் கடிதம் வாசிக்கப்பட்டது. இந்தக் கூட்டம் முடிந்த பிறகு ஜஸ்டின் கூறும்போது, லிபரல் கட்சி வலுவாகவும், ஒற்றுமையாகவும் இருப்பதாகத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *