மராத்தியர்களின் கடும் எதிர்ப்பையடுத்து மகராஷ்டிரத்தில் பள்ளிகளில் மும்மொழித் திட்டம் ரத்து..!

மராத்தியர்களின் கடும் எதிர்ப்பையடுத்து மகராஷ்டிரத்தில் பள்ளிகளில் மும்மொழித் திட்டம் என்ற பெயரில் இந்தியைப் புகுத்தும் தீர்மானங்களைத் தேவேந்திர பட்னாவிஸ் அரசு ரத்து செய்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் மராத்தி, ஆங்கில வழிப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை இந்தி கட்டாயமாக ஒரு பாடமாக இடம்பெறும் என்று குறிப்பிட்ட அரசாணை ஏப்ரல் பதினாறாம் நாள் வெளியிடப்பட்டது. இதற்கு சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே, நவநிர்மாண் சேனைத் தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோரும் மராத்திய மொழி ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இதையடுத்து ஜூன் 17ஆம் நாள் வெளியிட்ட அரசாணையில், ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தது 20 பேர் விருப்பம் தெரிவித்தால் இந்தி மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கும் கடும் எதிர்ப்பு எழுந்ததால் இரு அரசாணைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதை அறிவித்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மும்மொழித் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்துக் கல்வியாளர்கள், பொதுமக்களிடம் கருத்துக் கேட்டுப் பரிந்துரைகளை அளிப்பதற்காக மாநிலங்களவை உறுப்பினர் நரேந்திர யாதவ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அந்தக் குழு தனது அறிக்கையை அளிக்கும் வரை இந்திப் பாடம் குறித்த முந்தைய இரு அரசாணைகளும் ரத்துச் செய்யப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *