
மக்கள் விரும்பும் நல்லாட்சியைத் தமிழ்நாட்டில் உருவாக்குவதற்காகத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் தனித்துக் களம் கண்ட அதிமுக கடந்த ஏப்ரல் மாதத்தில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது.
அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் விடுத்ததை ஏற்றுக்கொள்ளப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மறுத்துவிட்டார். இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சில மாதங்களுக்கு முன் அமமுக விலகியது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்த அமித் ஷா, பியூஷ் கோயல் ஆகியோர் கடுமையாக முயன்று வருகின்றனர். சனவரி 23ஆம் நாள் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பாஜகவின் மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் இந்த மாநாட்டில், வரும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து போட்டியிடும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் பிரதமருடன் மேடையில் அமர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காகப் பல்வேறு கட்சிகளுடன் பேச்சு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அமமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில் கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கப்போவதாகத் தெரிவித்தார்.
விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை, இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ்செய்துவிடல் என்பதற்கொப்ப இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.




