
தமிழருக்கு எதிரான ஊழல் கட்சியான திமுகவை ஆட்சியை விட்டு அகற்றுவதற்குத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னையில் உள்ள விடுதியில் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயலை அமமுக பொதுச்செயலாளர் தினகரன் சந்தித்துத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார்.
அதன்பின் பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தினகரன் மீண்டும் இணைந்தது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார். தமிழ்நாடு, தமிழ்ப் பெருமிதம் ஆகியவற்றுக்கு எதிராகச் செயல்படும் ஊழல் கட்சியான திமுகவை ஆட்சியை விட்டு அகற்றுவது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி மற்றும் பிறரின் கடமையாகும் எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்தியாவுக்கு எதிரான திமுக கூட்டணியைத் தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டுக்கு நல்ல தலைமை, நல்லாட்சி, சமூக நீதி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அனைத்தையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியே வழங்கும் என்றும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
தமிழ் மொழியையும் பண்பாட்டையும் உலகெங்கும் பரப்புவதைத் தாங்கள் உறுதி செய்வதாகவும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.



