
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ கவுண்ட்டவுன் தற்போது தொடங்கியுள்ளது. கடந்த 9-வது சீசனில் தனது தனித்துவமான பேச்சு மற்றும் எதார்த்தமான அணுகுமுறையால் ரசிகர்களைக் கவர்ந்த ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, இந்த மைல்கல் சீசனையும் தொகுத்து வழங்க மீண்டும் களம் இறங்குகிறார்.
புதிய ஆளுமைகள், எதிர்பாராத திருப்பங்கள், உணர்ச்சிப் போராட்டங்கள் மற்றும் அனல் பறக்கும் மோதல்கள் என பல்வேறு சுவாரஸ்யங்களுடன் 10-வது சீசன் அமையவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ன் பிரம்மாண்ட தொடக்க விழா வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது. வழக்கம்போல் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
மேலும், இந்த முறை ஓடிடி தளமான ஜியோஹாட்ஸ்டார் தளத்திலும் நிகழ்ச்சி ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும், சுவாரஸ்யங்களையும் பார்வையாளர்கள் 24 மணி நேரமும் நேரலையாகக் கண்டுகளிக்க முடியும்.
உலகநாயகன் கமல்ஹாசனுக்குப் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக களமிறங்கிய விஜய் சேதுபதி, தனது முதல் சீசனான 9-வது சீசனிலேயே போட்டியாளர்களைக் கையாண்ட விதத்திலும், வார இறுதி நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்திய ‘மக்கள் செல்வன்’ பாணியிலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். தற்போது பிக்பாஸ் தமிழ் 10-வது சீசனை எட்டியுள்ள நிலையில், விஜய் சேதுபதியின் மீண்டும் வருகை இந்த மைல்கல் சீசனை மேலும் விறுவிறுப்பாகவும், பொழுதுபோக்கு நிறைந்ததாகவும் மாற்றும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதற்கிடையே, பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையவுள்ள போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதிய போட்டியாளர்கள், புதிய விதிமுறைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ஐ காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


