Watching Porn Video Young Generation: ஆபாச படம் பார்ப்பது குற்றமல்ல!

‘ஆபாச படங்களைப் பதிவிறக்கம் செய்து, தனிப்பட்ட முறையில் பார்ப்பது சட்டப்படி குற்றமல்ல’ என, தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆபாச படங்கள் பார்த்ததாக வாலிபர்மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்தது.

சென்னை அம்பத்துார் பகுதியைச் சேர்ந்த, 27 வயது வாலிபர், மொபைல் போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களைப் பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளார்.

அவர்மீது, தகவல் தொழில்நுட்பம், போக்சோ சட்டப் பிரிவுகளில், அம்பத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருவள்ளூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வாலிபர் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:

ஆபாச படங்களைப் பதிவிறக்கம் செய்து, தனிப்பட்ட முறையில் பார்ப்பது சட்டப்படி குற்றமல்ல. அவற்றை மற்றவர்களுக்கு அனுப்புவது தான் குற்றம். முந்தைய தலைமுறை, மது, புகைக்கு எப்படி அடிமையானதோ, அதே போல இன்றைய தலைமுறை ஆபாச படங்களுக்கு அடிமையாகி உள்ளது.

ஒரு பொத்தானை அழுத்துவதன் வாயிலாக அனைத்து தரவுகளும், எவ்வித தணிக்கையுமின்றி கிடைக்கின்றன.
இதற்கு, மொபைல் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் வழிவகுக்கின்றன. இவற்றால், இன்றைய இளம் தலைமுறையினர், புதிய சவால்களை எதிர்கொள்கின்றனர்.

இதற்காகப் பழி சொல்லாமல், அவர்களை இந்தப் பழக்கத்திலிருந்து மீட்பதற்கு அறிவுரை வழங்கும் அளவுக்குச் சமூகம் பக்குவமடைய வேண்டும். பள்ளிகளிலிருந்து, இதுதொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ஆபாச படங்கள் எளிதில் கிடைப்பதால், இந்தத் தலைமுறையினர் அதற்கு அடிமையாகி விடுகின்றனர். பத்தில் ஒன்பது சிறுவர்கள் ஆபாச படங்களைப் பார்ப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆபாச படங்களைப் பார்ப்பதால், உளவியல், உடல் ரீதியாகப் பதின்ம வயது குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். வாலிபர்மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது.அறிவுரைகளைக் கேட்டு, மகிழ்ச்சி, ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக, ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கத்திலிருந்து விடுபடுவாரென, இந்த நீதிமன்றம் நம்புகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *