Bhavatharini Rip: பொதுமக்கள், திரை பிரபலங்கள் அஞ்சலி!

Advertisements

பவதாரிணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு பொதுமக்கள் மற்றும் திரை பிரபலங்கள் குவிந்து வருகின்றனர்.

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி. பின்னணி பாடகியான இவர் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி, இதற்காக கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

இலங்கையில் அவருக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் தொடர் சிகிச்சை பலனளிக்காத நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து நேற்று மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 47.

இதையடுத்து, பிரேத பரிசோதனைக்கு பிறகு பவதாரிணி உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. விமான நிலைய நடைமுறைகள் முடிந்து, பவதாரிணி உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

பவதாரிணியின் உடலை பெறுவதற்காக அவரது சகோதரர் கார்த்திக் ராஜா மற்றும் நடிகர் சுப்பு பஞ்சு அருணாச்சலம் ஆகியோர் சென்னை விமான நிலைய கார்கோ பிரிவிற்கு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து, அவரது உடல் தியாகராய நகரில் உள்ள இளையராஜா வீட்டிற்கு  கொண்டுசெல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் மற்றும் திரை பிரபலங்கள் அஞ்சலிக்காக பவதாரிணி உடல் வைக்கப்பட்டுள்ளது.

பவதாரிணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு இயக்குனர்கள் வெங்கட் பிரபு, சுதா கொங்கரா, நடிகர் பிரேம்ஜி, பாரதிராஜா மகன் மனோஜ் ஆகியோர் வருகை தந்துள்ளனர். மேலும், பொதுமக்கள் மற்றும் திரை பிரபலங்கள் குவிந்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, இறுதிச்சடங்கிற்காக அவரது உடல் இரவு 10 மணியளவில் சொந்த ஊரான தேனிக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு பவதாரிணியின் உடல் இன்று நள்ளிரவு சொந்த ஊரான தேனிக்கு எடுத்துச்செல்லப்படும் என்றும், அங்கு அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *