கோவை:
கோவை விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு நேற்று இரவு விமானம் ஒன்று புறப்படத் தயாராக இருந்தது.
இதில் பயணிப்பதற்காகப் பயணிகளும் விமான நிலையத்திற்கு வந்தனர். பயணிகள் அனைவரையும் மற்றும் அவர்களது உடைமைகளையும் விமான நிலைய பாதுகாப்பு படை போலீசார் மற்றும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதன்பின்னர் பயணிகள் விமானத்தில் ஏறினர். அப்போது இந்த விமானத்தில் பயணிப்பதற்காகக் கோவை விமான நிலையத்திற்கு ஒருவர் வந்தார். அவர் கையில் கைப்பை வைத்திருந்தார். விமான நிலைய பாதுகாப்பு படை போலீசார் அவரைச் சோதித்து, விட்டு அவர் கையில் வைத்திருந்த கைப்பையும் சோதனை செய்தனர்.
அதில் கைத்துப்பாக்கி ஒன்று இருந்தது. அந்தத் துப்பாக்கியில் 2 குண்டுகள் இருந்தன. இதைப் பார்த்ததும் அதிர்ச்சியான பாதுகாப்பு படை போலீசார், உடனே விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.
அவர்களும் விரைந்து வந்து, அந்த நபரைத் தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். அவரிடம் துப்பாக்கியை எதற்காக எடுத்து வந்தீர்கள். எந்த ஊர், எதற்காகக் கோவைக்கு வந்தீர்கள் எனப் பல்வேறு கேள்விகளைக் கேட்டுத் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் என்பது தெரிய வந்தது. இவர் சொந்தமாகக் கேரவன் வாகனம் வைத்துள்ளார்.
அந்த வாகனத்தைச் சர்வீஸ் விடுவதற்காகக் கோவைக்கு வந்துள்ளார். வாகனத்தைச் சர்வீஸ் விட்டு விட்டு, மீண்டும் சென்னை செல்வதற்காக விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்.
சென்னை செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்தபோது, தான் எப்போதும் பாதுகாப்புக்காக வைத்திருக்கும் கைத்துப்பாக்கியையும் தவறுதலாக எடுத்து வந்தது தெரியவந்தது. துப்பாக்கிக்கான லைசென்சும் அவரிடம் இருந்தது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படை போலீசார், தொழில் அதிபரைப் பீளமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.