Bhagavathy Amman Temple Festival: புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில் பொங்காலை திருவிழா நாளைத் துவக்கம்!

Advertisements

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பொங்காலை திருவிழா நாளை நடைபெறுகிறது.

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் பொங்காலை திருவிழா உலகப்பிரசித்தி பெற்றதாகும். ஒரே இடத்தில் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு பொங்கலிட்டு வழிபடுவார்கள். இந்த விழாவில் பங்கேற்க உலகின் பல பகுதிகளில் இருந்தும் பெண்கள் வருவதுண்டு. சிறப்பு வாய்ந்த இந்தப் பொங்காலை விழா கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் பொங்கால் திருவிழா இந்த ஆண்டு நாளை (17-ந்தேதி) தொடங்குகிறது. காலை 8 மணிக்குக் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தோட்டம் பாட்டு வழங்கும் நிகழச்சி நடத்தப்படுகிறது.

லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொங்கல் வைக்கும் வழிபாடு 25-ந்தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 10.30 மணியளவில் கோவிலில் உள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டப்படும். மதியம் 2 மணிக்குக் கோவிலின் முன்பு பல கிலோ மீட்டர் சுற்றளவில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட தொடங்குவார்கள்.

இரவு 7.30 மணிக்குக் குத்தியோட்ட சிறுவர்களுக்குச் சூரல் குத்து, இரவு 11 மணிக்கு மணக்காடு சாஸ்தா கோவிலுக்குச் சாமி ஊர்வலம் கொண்டு செல்லப்படுகிறது. மறுநாள் (26-ந்தேதி) காலை 8 மணிக்கு அம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்படுவார். அன்று இரவு காப்பு அகற்றப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது.

விழாவில் திரளானோர் பங்கேற்பார்கள் என்பதால், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *