
பிரதமர் நரேந்திர மோடியின் உலகளாவிய தொலைநோக்குத் தலைமை மற்றும் இருதரப்பு சர்வதேச உறவுகளை மேம்படுத்திய சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி, நார்வே நாட்டின் மிக உயரிய குடிமை விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ராயல் நார்வேயன் ஆர்டர் ஆஃப் மெரிட்’ வழங்கப்பட்டுள்ளது.
இது பிரதமர் மோடி சர்வதேச அரங்கில் பெறும் 32-வது உயரிய கௌரவமாகும். இதற்கு ஒரு நாள் முன்னதாக, வெளிநாட்டு அரசாங்கத் தலைவர்களுக்கு ஸ்வீடன் அரசு வழங்கும் மிக உயர்ந்த கௌரவமான ‘ராயல் ஆர்டர் ஆஃப் தி போலார் ஸ்டார், டிகிரி கமாண்டர் கிராண்ட் கிராஸ்’ விருதும் அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஸ்வீடனில் தனது இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நார்வே சென்றடைந்துள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் நலன்களையும் சர்வதேச உறவுகளையும் மேம்படுத்துவதில் ஆற்றிய சிறப்பான சேவைக்காக இந்த ‘கிராண்ட் கிராஸ்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் முதல் நார்வே பயணம் இது என்பதோடு மட்டுமல்லாமல், கடந்த 43 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் அந்நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை என்ற வரலாற்றுச் சிறப்பையும் பெற்றுள்ளது.


