
பெங்களுரு பாலாஜி நகரைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 34). இவருக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உண்டு. நேற்று அதிகாலை 3.30 மணியளவில் வெங்கட்ராமனுக்கு லேசாக நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக, பைக்கில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மனைவியுடன் சென்றுள்ளார். அங்கு, மருத்துவர் இல்லாததால், மற்றொரு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஈசிஜி எடுத்து பார்த்ததில் மாரடைப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், எமர்ஜென்சிக்கு சிகிச்சை அளிக்க வசதி இல்லை என்று கூறி விட்டனர்.
பின்னர், ஜெயநகரிலுள்ள ஜெயதேவா மருத்துவமனைக்கு செல்லும்படி கூறியுள்ளனர். ஆம்புலன்சும் ஏற்பாடு செய்யவில்லை. இதனால், மீண்டும் அந்த தம்பதி பைக்கில் சென்றுள்ளனர். அப்போது, நெஞ்சு வலி அதிகமாகி ரோட்டிலேயே சரிந்து விட்டார் வெங்கட்ராமன். இதையடுத்து, அவரின் மனைவி கத்தி கதறி கூச்சலிட்டு வாகனங்களை நிறுத்த முயற்சித்துள்ளார்.
ஆனால், யாரும் நிறுத்தவில்லை. 15 நிமிட போராட்டத்துக்கு பிறகு, ஒரு டாக்சி டிரைவர் வெங்கட்ராமனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவினார். ஆனால், செல்லும் வழியிலேயே வெங்கட்ராமன் பரிதாபமாக இறந்து போனார். வெங்கட்ராமனின் மனைவி சாலையில் உதவி கேட்டு போராடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு வெங்கட்ராமனுக்கு திருமணம் நடந்தது. 4 வயதில் மகனும் ஒன்றரை வயதில் மகளும் உள்ளனர். வெங்கட்ராமனின் தாய்க்கு 6 குழந்தைகள் பிறந்துள்ளனர். அனைத்து , குழந்தைகளும் இறந்து போன நிலையில், வெங்கட்ராமன் மட்டுமே உயிரோடு இருந்துள்ளார். தற்போது, அந்த தாய் எஞ்சியிருந்த ஒரே மகனையும் இழந்துள்ளார்.
இத்தகைய, சோகமான சூழலிலும் வெங்கட்ராமனின் குடும்பத்தினர் அவரின் கண்களை தானம் செய்துள்ளனர்.




