
திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன். தற்பொழுது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தயாநிதி மாறன் கும்பகோணத்தில் பிறந்து சென்னை லயோலா கல்லூரியில் பட்டம் படித்து அரசியல் வாழ்க்கையில் நுழைந்தவர்.கடந்த 2004 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டு மத்திய தகவல் தொழில் தொடர்பு துறை அமைச்சராக பதவி வகித்தார்.
பின்னர் 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது இவர் மத்திய ஜவுளித்துறை அமைச்சராக பதவி வகித்தார். இதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்..
இந்த நிலையில் தயாநிதி மாறனுக்கும் அவரது சகோதரர் கலாநிதி மாறனுக்கும் இடையே நீண்ட காலமாகவே பனிப்போர் நிலவி வருகிறது. தமிழகத்தின் பிரபலமான சன் நெட்வொர்க் நிறுவனத்தின் பங்குகளை கலாநிதி மாறன் சட்ட விரோதமாக தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார் என தயாநிதி மாறன் சமீபத்தில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
சன் தொலைக்காட்சி என்பது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், முரசொலி மாறனின் மனைவி மல்லிகா மாறன் ஆகியோரால் 1985 இல் தொடங்கப்பட்ட சுமங்கலி கேபிள் நிறுவனம் தான் அடுத்த கட்ட வளர்ச்சியாக 1993இல் சன் டிவியாக தொடங்கப்பட்டது,
முன்னதாக அறிவாலயத்தில் இயங்கி வந்த சன் டிவியை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் அங்கிருந்து வெளியேற்றினார். மதுரை தினகரன் அலுவலகம் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கருணாநிதி மாறன் சகோதரர்களை ஒதுக்கி வைத்தார்,
இதன் பிறகு கடந்த 2007 ஆம் ஆண்டு கலைஞர் டிவி உதயமானது. இதற்கு இடையே சன் டிவி ஆதித்யா டிவி சன் மியூசிக் டிவி சன் நியூஸ் டிவி என மிக வேகமாக வளர்ச்சி அடைந்தது. இந்த வளர்ச்சிக்கு காரணம் கலாநிதி மாறன் தான் இருந்தபோதிலும் இதில் தயாநிதி மாறனுக்கும் சொத்து பங்கு இருக்கிறது என வாதிடப்பட்டது.
திமுக தரப்பில் தயாநிதிமாறன் கலாநிதி மாறன் ஆகியோருடைய மோதல் பெரிதாக பேசப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலையிட்டு சமரசம் செய்து வைத்தார். இந்த நிலையில் , சமீப காலமாக தயாநிதி மாறன் தொடர்பான செய்திகளை சன் தொலைக்காட்சி ஒளிபரப்புவதில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்பட்டு இருக்கிறது.
திட்டமிட்டு தயாநிதி மாறனை இருட்டடிப்பு செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஏற்பட்ட நிலையில் இது தொடர்பாக திரைக்குப் பின்னால் தயாநிதி மாறன் கலாநிதி மாறன் ஆகியோருக்கு இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்து வருவதாக சொல்கிறார்கள்.இந்த நிலையில் சன் தொலைக்காட்சிக்கு போட்டியாக தயாநிதி மாறன் சார்பில் புதிதாக ஒரு தொலைக்காட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
சென்னையின் மையப்பகுதியான நுங்கம்பாக்கம் ஏரியாவில் தயாநிதிமாறனின் புதிய தொலைக்காட்சி நிலையம் அமைக்க போவதாக தெரிகிறது. இதற்கான பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே இந்த தொலைக்காட்சி தொடங்கப்படும் என தெரிகிறது.இதற்கிடையே தமிழக அரசியல் தலைவர்களை பொருத்தவரையில் ஒவ்வொரு கட்சி சார்பாகவும் தொலைக்காட்சிகள் இயங்கி வருகின்றன.
அந்த வகையில் நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றி கழகத்தை பிரபலப்படுத்துவதற்கு சொந்தமாக தொலைக்காட்சி இல்லை என்ற குறைபாடு இருக்கிறது. இதுகுறித்து பலரும் நடிகர் விஜய் இடம் கருத்து தெரிவித்து வந்த நிலையில் தற்பொழுது தமிழக வெற்றி கழகத்திற்கு என ஒரு தொலைக்காட்சியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
ஆனால் மிகக் குறுகிய காலத்தில் புதிய தொலைக்காட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதில் சிரமம் இருப்பதால் நடிகர் விஜயகாந்த் தொடங்கிய கேப்டன் தொலைக்காட்சியை விலைக்கு பெறலாமா என்ற யோசனை நடைபெற்று வருகிறது. கேப்டன் தொலைக்காட்சி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தால் கடந்த 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது இதனை விஜயகாந்த் தொடங்கி வைத்தார்.
சுமார் 15 ஆண்டுகளை தாண்டி நிலையில் கேப்டன் தொலைக்காட்சியை வெற்றிகரமாக நடத்துவதில் அந்த நிறுவனம் சில சிரமங்களை சந்தித்து வருவதாக சொல்கிறார்கள். எனவே எந்த நேரமும் கேப்டன் தொலைக்காட்சி நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவான செய்தி தொலைக்காட்சியாக மாறலாம் என்று சொல்கிறார்கள். இருந்த போதிலும் புதிய தொலைக்காட்சி தொடங்குவதற்கான வேறு பல முயற்சிகளும் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்று வருகிறது.
எனவே தமிழக தொலைக்காட்சிகளில் புதிதாக இரண்டு செய்தி தொலைக்காட்சிகள் விரைவிலேயே வர காத்திருக்கின்றன என்பது முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது.



