
சென்னை அருகே வானகரத்தில் கார் ஓட்டுநர் பொறுப்பற்ற செயலால் ஏற்படுத்திய விபத்துக்களில் இருவர் உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டைச் சேர்ந்த சீனிவாசன் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர் மதுரவாயல் அருகேயுள்ள உணவகத்தில் உணவு வாங்கத் தனது 3 வயது மகளுடன் காரில் சென்றுள்ளார். உணவை வாங்கிவிட்டு வீடு திரும்பும்போது வேகமாக காரை ஓட்டியதால் எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியுள்ளார்.
அங்கிருந்த மக்களும் வாகன ஓட்டிகளும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அச்சமடைந்த சீனிவாசன் காரை எடுத்துக்கொண்டு நிற்காமல் அதிவேகமாக அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.
இதனால் அடுத்தடுத்துத் தொடர் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. வானகரம் சிக்னலில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரை அதிவேகமாக இடித்துவிட்டு மேலும் வேகமாகச் சென்று வானகரம் மீன் சந்தை அருகே மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்றவரையும் இடித்தார்.
வானகரம் சிக்னல் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து விபத்தில் சிக்கிய நூம்பலைச் சேர்ந்த முதியவர் கிருஷ்ண பிரசாத் இரண்டு கால்களும் முறிந்து பரிதாபமாக உயிரிழந்தார். வானகரம் மீன் சந்தை அருகே விபத்தில் சிக்கிய அர்ஜுனன் என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
அர்ஜுனுடன் வந்த அவர் தந்தை ஜெகதீசன் படுகாயமடைந்தார். விபத்தை ஏற்படுத்திய காரைத் தொடர்ந்து விரட்டிச் சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் போக்குவரத்துக் காவல்துறையினரும் வேலப்பன்சாவடியில் மடக்கிப் பிடித்தனர். காரில் இருந்து இறங்கிய சீனிவாசன் முதலில் மக்களைத் தாக்கத் தொடங்கினார்.
இதனால் கடும் கோபம் அடைந்த மக்கள் காரை அடித்து நொறுக்கியதுடன், சீனிவாசனை அடித்து உதைத்தனர். காவல்துறையினர் சீனிவாசனையும், அவரது 3 வயது மகளையும் மீட்டுக் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். பி
ன்னர் 3 வயதுச் சிறுமியைத் தாயிடம் ஒப்படைத்தனர். மன அழுத்தத்தாலும் அச்சத்தாலும் அவர் இந்த விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


