Ayodhya Ram Temple kumbabishekam: 11 நாட்கள் விரதம் இருக்கும் பிரதமர் மோடி!

அயோத்தி: அயோத்தி ராமர்கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு பிரதமர் மோடி சிறப்பு ஆடியோ வெளியிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள  அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் இம்மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி X (முன்னாள் ட்விட்டர்) என்ற ஆடியோ செய்தியை வெளியிட்டார்.

அந்த ஆடியோ பதிவில் ‘ராம், ராம்’ எனத் துவக்கி தொடர்ந்து அவர் பேசியதாவது: ”வரும் 22ம் தேதி நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இந்தப் புனித நிகழ்வில் நான் பங்கேற்பது பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். இன்று முதல் 11 நாட்கள் விரதம் துவக்கி உள்ளேன். உணர்வுப்பூர்வமாகப் புதிய சக்தியைப் பெறுகிறேன். நான் ஒரு புத்துணர்ச்சியை உணர்கிறேன். இது போன்ற உணர்வை நான் அறிந்ததில்லை.

ராம பக்தர்கள் என்னை ஆசீர்வதிக்க வேண்டும். இது நாட்டு மக்களின் விழா, அனைவரையும் முன்னிலைப்படுத்தக் கடவுள் என்னைப் படைத்துள்ளார். சுவாமி விவேகானந்தர், சத்ரபதிசிவாஜி ஆகியோரை நினைவுகூர்கிறேன். ஆன்மிகம், நமது கலாசாரத்தை உலக அளவில் புகழை பெற்றுதந்த விவேகானந்தரின் பிறந்த நாள் இன்று. அவரை நினைக்கும்போது ஒரு உத்வேகம் பிறக்கிறது. அவரது ஆற்றலும், உற்சாகமும் இளைஞர்களுக்கு ஒரு தூண்டுகோலாக அமைகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ராம்” என உரையை முடித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *