அயோத்தியில் நடக்க இருக்கும் விமான நிலைய பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், புதிதாக விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டு நிறைவடைந்த நிலையில் ஜனவரியில் குடமுழுக்கு நிகழ்ச்சி, நடைபெறவுள்ளதால் பக்தர்கள் மற்றும் வெளி நாட்டினர் வந்து செல்வதற்கு வசதியாக விமான போக்குவரத்து தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டு பணிகள் முடிவடைந்த நிலையில் விமான நிலையம் திறப்பு விழா நடக்கவுள்ளது.
இந்நிலையில் வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி, அயோத்தி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அயோத்திக்கான முதல் விமானம், டெல்லியில் இருந்து 30-ந் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டு, காலை 11.20 மணிக்கு அயோத்தி விமான நிலையத்தில் தரை இறங்கவுள்ளது.
விமான நிலைய திறப்புக்கு பிறகு, பிரதமர் மோடி வாகன பேரணியாக மறுசீரமைக்கப்பட்ட அயோத்தி ரெயில் நிலையத்துக்கு செல்கிறார். விமான நிலையத்தில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள ரயில் நிலையமும் பிரதமரால் திறக்கப்படவுள்ளது. வந்தே பாரத், அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அயோத்தி ரெயில் நிலையம்-விமான நிலையம் இடையே 5 கி.மீ. நீள மேம்பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அடிக்கல் நாட்டும் விழா முடிந்து மீண்டும் அயோத்தி விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி வருகிறார். வழியில், 51 இடங்களில் கலாசார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துறவிகளும், சாதுக்களும் பிரதமருக்கு ஆசி வழங்கிய பின் அயோத்தி விமான நிலையத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது.

